இறுதியாண்டு மாணவர்களுக்காக 8 மாதத்துக்குப்பின் கல்லூரிகள் திறப்பு 70 சதவீதம் மட்டுமே வருகைப் பதிவு

நாகர்கோவில்  பெண்கள் கிறிஸ்தவ கல்லூரியில், ஒரு பெஞ்சுக்கு ஒரு மாணவி வீதம் அமர வைக்கப்பட்டு, வகுப்பு நடைபெற்றது.               படம்: எல்.மோகன்.
நாகர்கோவில் பெண்கள் கிறிஸ்தவ கல்லூரியில், ஒரு பெஞ்சுக்கு ஒரு மாணவி வீதம் அமர வைக்கப்பட்டு, வகுப்பு நடைபெற்றது. படம்: எல்.மோகன்.
Updated on
1 min read

கரோனா விடுப்பை அடுத்து, இறுதியாண்டு மாணவர்களுக்காக, 8 மாதங்களுக்குப்பின் கல்லூரிகள் நேற்று திறக்கப்பட்டன. மாணவ, மாணவியர் உற்சாகமாக வகுப்புகளுக்கு சென்றனர்.

கரோனா ஊரடங்கு காரணமாக கல்லூரிகள் மூடப்பட்டிருந்தன. நடப்பு கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை இணையவழியில் மேற்கொள்ளப்பட்டது. கரோனா ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் கலை, அறிவியல் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் இறுதியாண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் 8 மாதங்களுக்குப்பின் நேற்று தொடங்கப்பட்டன.

திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மற்றும் கன்னியா குமரி மாவட்ட கல்லூரிகளில் உடல் வெப்பநிலை பரிசோதனைக்குப்பின் மாணவர்கள் அனுமதிக்கப்பட்டனர். கைகழுவும் திரவம் வழங்கப்பட்டது. பலரும் முககவசம் அணிந்து வந்திருந்தனர்.

கரோனா தடுப்பு முன்னெச் சரிக்கை நடவடிக்கையாக ஒரு பெஞ்சில் ஒருவர் அல்லது இருவர் மட்டுமே சமூக இடைவெளியுடன் அமர அனுமதிக்கப்பட்டிருந்தனர். வீட்டில் யாருக்கேனும் கரோனா தொற்று இருந்தால் கல்லூரிகளுக்கு வரவேண்டாம் என்று மாணவர்கள் அறிவுறுத்தப் பட்டனர். கல்லூரி விடுதிகளும் நேற்று முதல் திறக்கப்பட்டன. கல்லூரிகளுக்கு மாணவ, மாணவி கள் ஆர்வத்துடன் சென்றனர்.எனினும், முதல் நாளான நேற்று 60 முதல் 70 சதவீத மாண, மாணவியரே வந்திருந்தனர்.

இதனிடையே, திருநெல்வேலி கல்லூரி வளாகங்களில் தனி நபர் இடைவெளி, முககவசம் அணிதல், கிருமி நாசினி பயன்பாடு உள்ளிட்ட பல்வேறு வழிமுறைகள் பின்பற்றப்படுகிறதா என்பது குறித்து மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார். அதன்படி பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரி, தூய யோவான் கல்லூரிகளில் ஆய்வு செய்த ஆட்சியர், முககவசம் அணிவதன் அவசியம் குறித்தும் அதனால் அவர்களது வீட்டில் உள்ளவர்களுக்கு நோய் பரவாமல் தடுக்கப்படுவது குறித்தும் விளக்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் பெருமாள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in