

சேலம் உருக்காலையில் ஆய்வு மேற்கொண்ட மத்திய உருக்குத்துறை இணை அமைச்சர் ஃபக்கன் சிங் குலாஸ்தியிடம், ‘ஆலை தனியார் மயமாக்கு தலைக் கைவிடக் கோரி’ தொழிற் சங்கத்தினர் மனு அளித்தனர்.
மத்திய உருக்குத்துறை இணை அமைச்சர் ஃபக்கன் சிங் குலாஸ்தி, சேலம் ஆலையின் உற்பத்திப் பிரிவை பார்வையிட்டு, உற்பத்தி தொடர்பான விவரங்களை கேட்டறிந்தார். ஆய்வின்போது, சேலம் உருக்காலை நிர்வாக இயக்குநர் சஞ்சீவ் தனேஜா, பொது மேலாளர் நாயக் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
ஆய்வுக்கு வந்த மத்திய இணை அமைச்சரை, சிஐடியு பொதுச் செயலாளர் சுரேஷ், ஐஎன்டியுசி பொதுச் செயலாளர் தேவராஜன், தொமுச பொதுச் செயலாளர் பெருமாள், அண்ணா தொழிற்சங்கம் பொதுச் செயலாளர் முருகேசன் உள்ளிட்ட தொழிற் சங்கங்களின் நிர்வாகிகள் சந்தித்து, சேலம் உருக்காலையை தனியார் மயமாக்கக் கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தனர். இது தொடர்பாக சிஐடியு பொதுச் செயலாளர் சுரேஷ்குமார் கூறியதாவது:
சேலம் உருக்காலை கடந்த அக்டோபர் மாதம் ரூ.60 லட்சம், நவம்பரில் ரூ.1 கோடி என லாபம் ஈட்டியுள்ளது. எனவே, உருக்காலையை தனியார் மயமாக்கும் கொள்கை முடிவை அரசு கைவிட வேண்டும். உருக்காலை விரிவாக்கம் மற்றும் நவீன மயமாக்கல் போன்ற வற்றுக்கு வழங்கிய ரூ.2,500 கோடி கடன் மற்றும் வட்டியை தள்ளுபடி செய்ய வேண்டும்.
கடந்த 5 ஆண்டுகளில் காலியாக உள்ள 500 பணியிடங்களை நிரப்ப வேண்டும். உருக்காலையின் மின் தேவையை பூர்த்தி செய்ய 50 மெகா வாட் சூரிய சக்தி மின் நிலையம் அமைக்க டெண்டர் நடவடிக்கை தொடங்கப்பட்டு, கிடப்பில் உள்ளதை மீண்டும் தொடங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதனிடையே, அம்பேத்கர் நினைவு நாளையொட்டி, சேலம் முள்ளுவாடி கேட் அருகே உள்ள அம்பேத்கர் சிலைக்கு மத்திய இணை அமைச்சர் ஃபக்கன் சிங் குலாஸ்தி மாலை அணிவித்து மரியாதை செய்தார்.