

திருச்செந்தூரில் வேல் யாத்திரை நிறைவு நாளில் மத்தியப்பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் கலந்து கொள்வார் என்று தமிழக பாஜக தலைவர் முருகன் தெரிவித்தார்.
பாஜகவின் வேல் யாத்திரையை முன்னிட்டு மதுரையில் முருகன் வழிபாடு நேற்று நடைபெற்றது. தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தலைமையில் மேலூரில் நேற்று பிற்பகல் 3 மணி அளவில் வேல் யாத்திரை தொடங்கியது. இது அழகர் மலையில் உள்ள சோலைமலைக்கு சென்றடைந்தது.
அங்கு எல்.முருகன், மாநில துணைத் தலைவர் ஏ.ஆர்.மகாலெட்சுமி, பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா, மாநில பொதுச் செயலர் சீனிவாசன், புறநகர் மாவட்டத் தலைவர் மகா சுசீந்திரன், கலை-கலாச்சாரப் பிரிவு பொறுப்பாளர் காயத்திரி ரகுராம் மற்றும் நிர்வாகிகள் முருகன் வழிபாடு நடத்தினர். பின்னர் எல்.முருகன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
புயலால் வேல் யாத்திரை ரத்து செய்யப்பட்டு மீதம் உள்ள அறுபடை வீடுகளில் முருகன் வழிபாடு நடத்தப்படுகிறது. டிச.7-ல் திருச்செந்தூரில் வேல் யாத்திரை நிறைவடையும். இதில் மத்தியப்பிரதேச முதல்வர் சிவராஜ்சிங் சவுகான் பங்கேற்பார். தமிழகம் முழுவதும் வேல் யாத்திரைக்கு வரவேற்பு அளித்த முருக பக்தர்கள், ஆன்மிகவாதிகளுக்கு நன்றி தெரிவிக்கிறோம் என்றார்.
வேல் யாத்திரைக்கு பிறகு தமிழக அரசியலில் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளதா? என்ற கேள்விக்கு முருகன் பதில் அளிக்கவில்லை.