

மேட்டூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீஸார் நடத்திய சோதனையில், கணக்கில் வராத ரூ.1,89,200 பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக வட்டாரப் போக்குவரத்து அலுவலர் உள்ளிட்ட 4 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
மேட்டூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் வாகனப் பதிவு, ஓட்டுநர் உரிமம் வழங்குதல் உள்ளிட்ட பணிக்கு இடைத்தரகர்கள் மூலம் கூடுதல் பணம் பெறுவதாக சேலம் லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீஸாருக்கு புகார்கள் வந்தன.
இதைத் தொடர்ந்து, சேலம் லஞ்ச ஒழிப்பு பிரிவு ஏடிஎஸ்பி., சந்திரமவுலி தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் ரவிச்சந்திரன், தங்கமணி, சிவகுமார், நரேந்திரன் மற்றும் மேட்டூர் மண்டல துணை வட்டாட்சியர் கார்த்திகேயன் உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் நேற்று மதியம் மேட்டூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, கணக்கில் வராத ரூ.1,89,200 பறிமுதல் செய்தனர். மேலும், இதுதொடர்பாக வட்டாரப் போக்குவரத்து அலுவலர் செழியன், மோட்டார் வாகன ஆய்வாளர் முரளி, இடைத்தரகர்கள் சரவணன், சதீஷ் ஆகியோரிடம் விசாரணை நடத்தி, அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்தனர்.