பயோ டீசலாக மாற்றும் திட்டத்துக்காக உணவு கூடங்களில் பயன்படுத்திய சமையல் எண்ணெய் சேகரிப்பு

பயோ டீசலாக மாற்றும் திட்டத்துக்காக   உணவு கூடங்களில் பயன்படுத்திய சமையல் எண்ணெய் சேகரிப்பு
Updated on
1 min read

பயன்படுத்திய சமையல் எண்ணெயை பயோ டீசலாக மாற்றும் திட்டத்துக்காக சேலம் மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை சார்பில் உணவு நிறுவனங்களில் பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெய் சேகரிக்கும் பணி தொடங்கியது.

எண்ணெய் சேகரிக்கும் பணியை ஆட்சியர் ராமன் தொடங்கி வைத்து கூறியதாவது:

சேலம் மாவட்டத்தில் உள்ள உணவகங்கள், இனிப்பு, காரம் தயாரிப்பு நிறுவனங்கள் மற்றும் பேக்கரி ஆகிய உணவு நிறுவனங்களில் இருந்து பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெயை, சிறு வியாபாரிகள் (தள்ளுவண்டி கடைக்காரர் கள்) பயன்படுத்துவதை தடுக்கவும், அவற்றை பயோ டீசலாக மாற்றும் முயற்சியில் மத்திய உணவு பாதுகாப்புத் துறை ஈடுபட்டுள்ளது.

தற்போது, சேலம் மாவட்டத்தில் உள்ள உணவு நிறுவனங்களில் இருந்து, பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெய் ஒரு லிட்டர் ரூ.25 விலையில் 1,000 லிட்டர் சேகரிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து, ‘ஈட் ரைட் இந்தியா’ என்ற இந்திய அளவிலான திறன் போட்டியில் சேலம் மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை இணைந்துள்ளதை குறிக்கும் வகையில் ‘ஈட் ரைட் சேலம்’ என்ற லோகோவை ஆட்சியர் ராமன் வெளியிட்டார்.

இதுதொடர்பாக உணவு பாதுகாப்புத் துறை மாவட்ட நியமன அலுவலர் கதிரவன் கூறியதாவது:

ஆந்திர மாநிலம் காக்கிநாடாவைச் சேர்ந்த நிறுவனம் அரசு அனுமதி பெற்று உணவு தயாரிப்பு நிறுவனங்களிடம் இருந்து பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெயை விலைக்கு வாங்கிக் கொள்கிறது.

முதல்கட்டமாக சேலம் மாநகராட்சி பகுதியில் 200 உணவு நிறுவனங்களிடம் இருந்து, பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெய் வாங்கும் நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து உணவு தயாரிப்பு நிறுவனங்களும் வரும் மார்ச் மாதத்துக்குள் இத்திட்டத்தின் கீழ் கொண்டு வரப்படும்” என்றார்.

நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் திவாகர், உணவு பாதுகாப்புத்துறை மாவட்ட நியமன அலுவலர் கதிரவன், உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சுருளி, சிவலிங்கம், ஆரோக்கிய பிரபு, சிங்காரவேல், ரமேஷ், புஷ்பராஜ், இளங்கோ உட்பட பலர் கலந்து கொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in