

குஜராத் பல்கலைக்கழகத்தின் சம்ஸ்கிருதத் துறை மாணவி சல்மா குரேஷி (26). இவர் சம்ஸ்கிருதத்தில் முனைவர் பெற்று அனைவரையும் ஆச்சரியப்பட வைத்திருக்கிறார். இந்தியாவில் குரு - சிஷ்ய முறையிலான பாரம்பரிய கல்வி முறை குறித்து இவர் ஆராய்ச்சி செய்து முனைவர் பட்டம் பெற்றுள்ளார்.
இதுகுறித்து சல்மா கூறும்போது, “வேதங்கள், உபநிடதங்கள், புராணங்களில் குரு - சிஷ்ய முறை குறித்து நிறைய கூறப்பட்டுள்ளன. பள்ளி படிப்பில் இருந்தே சம்ஸ்கிருதத்தின் மீது ஆர்வமாக இருந்தேன். வேதங்கள், புராணங்களைப் படிப்பது பிடிக்கும். இதற்கு எனது குடும்பத்தினர் யாரும் தடையாக இல்லை. இந்தமத தத்துவங்கள் பெரும்பாலும் சம்ஸ்கிருதத்தில் உள்ளதால், இது கடவுள் மொழி என்று நம்பப்படுகிறது. ஆனால், மதத்துக்கும் மொழிக்கும் எந்த தொடர்பும் இல்லை.
எந்த மொழியையும் படிக்க மாணவர்களுக்கு சுதந்திரம் அளிக்க வேண்டும். பழங்காலங்களில் குரு - சிஷ்ய முறையில் கல்வி கற்றுத்தரப்பட்டுள்ளது. சமூகத்தில் உள்ள அனைவரையும் மதிக்க வேண்டும் என்று அப்போது மாணவர்களுக்குக் கற்றத் தரப்பட்டுள்ளது. அதுபோன்ற ஒரு முறை தற்போது காணாமல் போய்விட்டது. என்னைப் பொறுத்தவரையில் சம்ஸ்கிருதத்தைக் கற்றுத் தரவேண்டும். சம்ஸ்கிருத ஆசிரியையாக வேண்டும் என்பது எனது விருப்பம் ” என்றார்.