

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும் சேலத்தில் இன்று காலை நடைபெறும் போராட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் பங்கேற்கிறார்.
மத்திய அரசின் புதிய வேளாண் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும் சேலத்தில் சேலம் ஒருங்கிணைந்த மாவட்ட திமுக சார்பில், இன்று காலை 9.30 மணிக்கு கந்தாஸ்ரமம் அடுத்துள்ள எஸ்ஆர்பி மைதானத்தில் போராட்டம் நடைபெறுகிறது.
கூட்டத்தில் திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் கருப்புக் கொடி ஏந்தி, மத்திய அரசின் புதிய வேளாண் திருத்த சட்டத்தை கண்டித்து கண்டன முழக்கம் எழுப்பி போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். இதில் திமுக தலைவர் ஸ்டாலின் பங்கேற்று, புதிய வேளாண் சட்டத்தை கண்டித்து உரையாற்றுகிறார். போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக நேற்று இரவு வந்த திமுக தலைவர் ஸ்டாலினுக்கு, சேலம் மாவட்ட எல்லையான சங்ககிரி பகுதியில் சேலம் மாவட்ட திமுக சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
போராட்டத்துக்கான ஏற்பாடுகளை சேலம் மத்திய மாவட்ட திமுக செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான ராஜேந்திரன், சேலம் மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் டி.எம். செல்வகணபதி, சேலம் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் எஸ்ஆர் சிவலிங்கம் உள்ளிட்டோர் செய்துள்ளனர்.