

‘குறைந்தபட்ச ஆதார விலையில் துவரை கொள்முதல் செய்யப்படவுள்ளது. சேலம் மாவட்ட விவசாயிகள் தங்களது விளைபொருட்களுக்கு அதிக விலை பெற்று பயன் பெறலாம்,’ என ஆட்சியர் ராமன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஆட்சியர் ராமன் தெரிவித்துள்ளதாவது:
விவசாயிகளின் விளை பொருளுக்கு உரிய விலை கிடைத்திடவும் அவர்களின் வருவாயை பெருக்கிடவும், அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி, துவரை சாகுபடி செய்த விவசாயிகள் பயன்பெறும் வகையில், மத்திய அரசின் நாஃபெட் நிறுவனம் மூலம் துவரை கொள்முதல் செய்யப்படவுள்ளது. இதன்படி சேலம் மாவட்டத்தில் 220 மெ.டன் துவரை கொள்முதல் செய்யப்படவுள்ளது.
சேலம் மற்றும் மேச்சேரி ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் முதன்மை கொள்முதல் முகமைகளாக செயல்படவுள்ளது.
இம்மையங்களில் துவரை கிலோ ஒன்றுக்கு ரூ.60-வீதம் வரும் 15-ம் தேதி முதல் மார்ச் 14-ம் தேதி வரை கொள்முதல் செய்யப்படவுள்ளது. கொள்முதல் செய்யப்படும் துவரைக்கான கிரையத் தொகை விவசாயிகளின் வங்கி கணக்கிற்கு நேரடியாக செலுத்தப்படும். ஒரு ஹெக்டருக்கு அதிகபட்சமாக 1,053 கிலோ வீதம் கொள்முதல் செய்யப்படும்.
இத்திட்டத்தின் மூலம் பயன்பெற விரும்பும் விவசாயிகள் தங்களைப்பற்றிய விவரங்களுடன் சேலம் (கைபேசி எண் 98947 76675, 90803 23535) அல்லது மேச்சேரி (கைபேசி எண் 95438 12911) ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் முன்பதிவு செய்துகொள்ளலாம். துவரை சாகுபடி செய்துள்ள விவசாயிகள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.