கோபி ஓடத்துறை ஏரி நிரம்பியது உபரிநீர் வெளியேறுவதால் மக்களுக்கு எச்சரிக்கை

கோபி ஓடத்துறை ஏரி நிரம்பியது உபரிநீர் வெளியேறுவதால் மக்களுக்கு எச்சரிக்கை
Updated on
1 min read

ஈரோடு மாவட்டத்தில் பரவலாகப் பெய்து வரும் தொடர் மழையால், நீர் நிலைகள் நிரம்பி வருகின்றன. கோபி ஓடத்துறை ஏரி நிரம்பியதால் உபரி நீர் வெளியேற்றப்படுகிறது.

ஈரோடு மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் தொடங்கிய சாரல் மழை இரவிலும் தொடர்ந்தது. நேற்று காலை முதல் தொடர்ந்து அவ்வப்போது மழை பெய்தது. தொடர் மழை காரணமாக, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள நீர் நிலைகள் நிரம்பி வருகின்றன.

கோபியை அடுத்த ஓடத்துறை ஊராட்சியில் 200 ஏக்கர் பரப்பளவில் 15 அடி உயரமும், 45.88 மில்லியன் கனஅடி கொள்ளளவும் கொண்ட மிகப்பெரிய ஏரி அமைந்துள்ளது. கீழ்பவானி பிரதான பாசன கால்வாய் கசிவுநீர் மற்றும் மழைக்காலங்களில் வழிந்தோடும் மழைநீர் ஆகியவை ஏரிக்கு தண்ணீர் வரத்தாகும். இந்த ஏரியின் மூலம் 72 ஏக்கர் நிலம் பாசனம் பெறுகின்றன. குடிமராமத்து திட்டத்தின் கீழ் இந்த ஏரி தூர்வாரப்பட்டது.

இந்நிலையில் கீழ்பவானி கசிவுநீர் மற்றும் மழையால் ஏரி முழுக்கொள்ளளவை எட்டியுள்ளது.

இதனால், ஏரியில் இருந்து விநாடிக்கு 200 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. உபரிநீர் வெளியேற்றப்படும் ஓடை அருகே வசிக்கும் விவசாயிகள் பாதுகாப்பான பகுதிகளுக்குச் செல்லு மாறும், கால்நடை களை ஓடையில் மேய்க்கவோ, துணிதுவைக்கவோ கூடாது என்றும் பொதுப்பணித்துறையின் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in