

மதுரையை சேர்ந்தவர் ரஞ்சித் குமார். பிளஸ் 2 படித்துள்ளார். மாற்றுத் திறனாளி விளையாட்டு வீரரான இவர், சர்வதேச, தேசிய போட்டிகளில் பல பதக்கங்கள் பெற்றுள்ளார்.
இவர், மதுரையில் ஒப்பந்த அடிப்படையில் 2002-ம் ஆண்டு முதல் மாற்றுத்திறனாளி தடகளப் பயிற்சியாளராகப் பணிபுரிந்து வருகிறார். பணி நிரந்தரம் செய்யக்கோரி பல முறை மனு அனுப்பினார். ஆனால் நிரந்தரப் பயிற்சியாளர் பணிக்குரிய கல்வித் தகுதி பெறவில்லை என்ற காரணத்தைக் கூறி, அதை அதிகாரிகள் நிராகரித்தனர். இவருக்கு பணி நிரந்தரம் வழங்கக்கோரி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி அமர்வு விசாரித்தது.
நீதிபதிகள் உத்தரவில், பல்வேறு மாநிலங்களில் விளையாட்டு வீரர்கள் உயர் பதவிகளில் நியமிக்கப்படுகின்றனர். ஆனால் தமிழகத்தில் கல்வித் தகுதியை காரணம் காட்டி விளையாட்டு வீரர்களுக்கு உரிய பணியிடம் மறுக்கப்படுகிறது. விளையாட்டு வீரர்களுக்கு உயர் பணியிடம் வழங்குவதற்கு கல்வித் தகுதி ஒரு தடையாக இருக்கக் கூடாது.
பிற மாநிலங்களில் விளையாட்டு வீரர்களின் கல்வித் தகுதியை பற்றி கவலைப்படாமல் அவர்களின் சாதனையைப் பார்த்து உயர் பதவிகளில் நியமிக்கின்றனர். அதைப் பின்பற்றி ரஞ்சித்குமாரை பணி நிரந்தரம் செய்வது அல்லது அவரை உயர் பணியிடத்தில் நியமிப்பது தொடர்பாக தமிழக அரசு முடிவெடுத்து நீதிமன்றத்துக்கு தெரிவிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.