

கரோனா நோய்த்தொற்று பரவாமல் தடுக்க அரசு அறிவுறுத்தியுள்ள முன்னெச்சரிக்கை விதிமுறைகளை திருமண மண்டப உரிமைாளர்கள் பின்பற்ற வேண்டும், என நாமக்கல் மாவட்ட ஆட்சியர் கா.மெகராஜ் தெரிவித்தார்.
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் கரோனா நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கைகளில் திருமண மண்டப உரிமையாளர்களுக்கான அரசின் வழிகாட்டி நெறிமுறைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. நாமக்கல் மாவட்ட ஆட்சியர் கா.மெகராஜ் தலைமை வகித்துப் பேசியதாவது:
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள மண்டபங்களில் திருமணம் மற்றும் இதர நிகழ்ச்சிகள் நடைபெறும்போது கரோனா நோய்த்தொற்று பரவாமல் தடுக்க அரசு அறிவுறுத்தியுள்ள முன்னெச்சரிக்கை விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். நிகழ்ச்சியில் பங்கேற்கும் அனைவரும் சமூக இடைவெளியை கடைபிடிப்பதுடன், முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். மண்டபத்தின் முன்புறம் வரவேற்பிடத்தில் முகக்கவசம் மற்றும் கிருமி நாசினி வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். திருமண மண்டபத்தின் முன்புறம் கைகழுவ ஏதுவாக தண்ணீர், சோப் வைக்க வேண்டும். மண்டப கொள்ளளவிற்கு பாதி அளவிற்கான நபர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும். பெரிய திருமண மண்டபமாக இருந்தாலும் 200 நபர்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
ஒரு நிகழ்ச்சி நடைபெற்று முடிந்தவுடன் அனைத்து இடங்களையும் கிருமிநாசினி தெளித்து தூய்மைப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். திருமண மண்டபங்கள், சமுதாய கூடங்கள் மற்றும் மக்கள் கூடும் இடங்களின் முக்கிய பகுதிகளில் முகக்கவசம் அணிதல், கிருமிநாசினி பயன்படுத்துதல் மற்றும் கைகளை தூய்மைப்படுத்துதல் தொடர்பாக தகவல் பலகை வைக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
தற்போது பருவமழை அதிகரித்து வரும் நிலையில் வேறு நோய்களும் பரவாமல் தடுக்க உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். கரோனா நோய் தொற்று பரவாமல் தடுக்க அரசு விதித்துள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைபிடிக்காத மண்டப உரிமையாளர்கள் மீது தக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும், என்றார்.
முன்னதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சி.சக்திகணேசன் முன்னிலை வகித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் துர்காமூர்த்தி, திருச்செங்கோடு கோட்டாட்சியர் ப.மணிராஜ் உட்பட திருமண மண்டப உரிமையாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.