

சேலம் மாவட்டம் ஆனைவாரி முட்டல் அருவியில் குளிக்க 8 மாதங்களுக்கு பின்னர் அனுமதியளிக்கப்பட்டுள்ளதால், பயணிகள் மகிழ்ச்சியடைந் துள்ளனர்.
ஆத்தூர் அடுத்த முட்டல் கிராமத்தையொட்டி கல்வராயன் மலை அடிவாரத்தில் ஆனைவாரி முட்டல் அருவி உள்ளது. தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழைக்காலங்களில் இந்த அருவியில் அதிகளவில் தண்ணீர் கொட்டும். அருவியில் இருந்து வழிந்தோடும் நீர் தேங்கும் முட்டல் ஏரியில் பயணிகள் படகு சவாரி செய்ய வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இங்கு வார விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகம் இருக்கும்.
கரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக கடந்த 8 மாதமாக ஆனைவாரி முட்டல் அருவியில் பயணிகள் குளிக்கவும், படகு சவாரி செல்லவும் தடை விதிக்கப்பட்டிருந்தது.
தற்போது, ஊரடங்கு தளர்வில் சுற்றுலா தலங்களை திறக்க அரசு அனுமதியளித்துள்ளது. இதையடுத்து, ஆனைவாரி முட்டல் அருவியில் பயணிகள் குளிக்கவும், முட்டல் ஏரியில் படகு சவாரி செல்லவும் நேற்று முதல் அனுமதியளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, நேற்று ஆனைவாரி முட்டல் அருவிக்கு பயணிகள் வருகை அதிகம் இருந்தது. அருவியில் தண்ணீர் வெள்ளியை உருக்கியதுபோல கொட்டுவதாலும், பயணிகள் குளிப்பதற்கு வசதியாக மிதமாக நீர் கொட்டுவதாலும் பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
இதுதொடர்பாக பயணிகள் சிலர் கூறியதாவது:
சேலம் மாவட்டத்தில் இயற்கையான இடத்தில் குளித்து மகிழும் இடமான சேலத்தின் குற்றாலம் எனப்படும் ஆனைவாரி முட்டல் அருவியில் குளிக்க கடந்த 8 மாதமாக பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. தற்போது, அனுமதி வழங்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியாக உள்ளது.
அருவியில் தண்ணீர் கொட்டுவதோடு, ஏரியும் நிரம்பி வழிகிறது. இதனால், உற்சாகமாக குளிக்கவும், படகு சவாரி செய்வதும் மகிழ்ச்சியாக உள்ளது.
இங்கு ஆண்டு முழுவதும் பயணிகள் வந்து செல்லும் வகையில் பொழுது போக்கு அம்சங்களுடன் கூடிய பூங்காவும், சாலை வசதியை மேம்படுத்தவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.