

உள்நாட்டு மீன் உற்பத்தியை பெருக்கும் வகையில், மீன் வளத்துறை சார்பில் ஊராட்சி குளங்களில் மீன் குஞ்சுகளை விடுவிக்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் சேலம் மாவட்டத்தில் 40 ஹெக்டேர் பரப்பளவில் 2 லட்சம் மீன் குஞ்சுகள் இருப்பு செய்து வளர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில், முதல்கட்டமாக பாப்பாரப்பட்டி ஏரி, சேலத்தாம்பட்டி ஏரி ஆகியவை தேர்வு செய்யப்பட்டு இரு ஏரிகளிலும் தலா 50 ஆயிரம் இந்திய பெருங்கெண்டை இனம் எனப்படும் கட்லா, ரோகு, மிர்கால் வகைகளில் நன்கு வளர்ந்த மீன் குஞ்சுகள் நேற்று விடப்பட்டன.
இந்நிகழ்ச்சியில், தருமபுரி மண்டல மீன் வள துணை இயக்குநர் சுப்ரமணியம், மேட்டூர் அணை மீன் வள உதவி இயக்குநர் கொளஞ்சிநாதன், மீன்வள ஆய்வாளர் ரத்தினம், சார் ஆய்வாளர் கவிதா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அடுத்த கட்டமாக புத்தூர் அக்ரஹாரம் ஏரியில் 35 ஆயிரமும், கனககிரி ஏரியில் 25 ஆயிரமும், புளியங்குளம் ஏரியில் 40 ஆயிரம் மீன் குஞ்சுகள் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.