

ஓசூர் அருகே 10 டன் கடத்தல் ரேஷன் அரிசியுடன் லாரியை பறிமுதல் செய்த பறக்கும் படையினர், கிருஷ்ணகிரியில் உள்ள நுகர் பொருள் வாணிபக் கழக கிடங்கில் ஒப்படைத்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் வழியாக கர்நாடக மற்றும் ஆந்திர மாநிலங்களுக்கு ரேஷன் அரிசி கடத்தப் படுவதைத் தடுக்க தீவிர ரோந்து மேற்கொள்ளுமாறு வருவாய்த்துறையினருக்கு ஆட்சியர் ஜெயசந்திர பானு ரெட்டி உத்தர விட்டுள்ளார். அதன்படி மாவட்ட வழங்கல் அலுவலர் கனகராஜ் தலைமையில் பறக்கும்படை தனி வட்டாட்சியர் மோகன்தாஸ், தனி வருவாய் ஆய்வாளர் பார்த்திபன் மற்றும் குழுவினர் கண்காணிப்புப் பணியில் ஈடு பட்டு வரு கின்றனர். இக்குழுவினர், ஓசூர் வட்டம் பாகலூர் சாலையில் ஜீமங்கலம் கிராமம் அருகே வாகனத் தணிக்கை மேற்கொண்டனர்.
அப்போது, ஓசூரில் இருந்து பாகலூர் நோக்கி வேகமாக வந்த மினி லாரியை நிறுத்துமாறு சைகை காட்டினர். சிறிது தூரத்தில் லாரியை சாலையோரம் நிறுத்திவிட்டு ஓட்டுநர் தப்பியோடினார். சந்தேகமடைந்த அதிகாரிகள் லாரியை சோதனையிட்டனர். லாரியில் 10 டன் ரேஷன் அரிசி கடத்திச் சென்றது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து 10 டன் அரிசி, லாரியை பறக்கும்படை அலுவலர்கள் பறிமுதல் செய்து, கிருஷ்ணகிரியில் உள்ள தமிழ்நாடு நுகர் பொருள் வாணிபக் கழக கிடங்கில் ஒப்படைத்தனர். இது தொடர்பாக உணவுக் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.