200 கிலோ சின்ன வெங்காயம் திருட்டு

200 கிலோ சின்ன வெங்காயம் திருட்டு
Updated on
1 min read

பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டம் கூத்தனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். விவசாயியான இவருக்கு கூத்தனூர்- பாடாலூர் சாலையில் விவசாய நிலம் உள்ளது. இவர், அண்மையில் அறுவடை செய்யப்பட்ட சின்ன வெங்காயத்தை சுத்தம் செய்து, திருச்சி வெங்காய மண்டிக்கு கொண்டுசென்று விற்பனை செய்வதற்காக, தலா 50 கிலோ எடை கொண்ட 20 மூட்டைகளாக தனது நிலத்தில் சேமித்து வைத்திருந்தார்.

இந்நிலையில், நேற்று அதிகாலை ராஜேந்திரன் வயலுக்குச் சென்றபோது, ரூ.12,000 மதிப்புள்ள 4 மூட்டை வெங்காயம் திருடு போயிருப்பது தெரிய வந்தது. இதுகுறித்த புகாரின்பேரில், பாடாலூர் போலீஸார் விசாரித்து வருகின்றனர். சின்ன வெங்காயம் அதிக விலைக்கு விற்பனையாவதால், பாடாலூர் பகுதிகளில் மட்டும் கடந்த 10 நாட்களில் 4-வது முறையாக சின்ன வெங்காயம் திருடு போயிருப்பது குறிப்பிடத்தக்கது.

நாட்டார்மங்கலத்தில் நான்கு வழிச்சாலை பிரியும் இடத்தில் ஊராட்சி மன்றம் சார்பில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா கடந்த 2 மாதங்களுக்கு மேலாக செயல்பாட்டில் இல்லை. இந்த சிசிடிவி கேமராவை செயல்பாட்டுக்கு கொண்டுவர மாவட்ட நிர்வாகமும், ஊராட்சி நிர்வாகமும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்களும், விவசாயிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in