

பரமக்குடி அருகே எமனேசுவரம் ஈஸ்வரன் கோயில் மேலத்தெருவைச் சேர்ந்தவர் நாகராஜன் (33). நெசவுத் தொழிலாளியான இவர் , கடந்த 25-ம் தேதி பட்டுச் சேலைகள் நெய்வதற்காக ரூ. 1.45 லட்சம் மதிப்புள்ள சுமார் 21 கிலோ பட்டுநூல்களை தனது தறிக்கூடத்தில் வைத்திருந்தார்.
மறுநாள் காலை சென்று பார்த்தபோது பட்டு நூல்கள் திருடப்பட்டிருந்தன. இதுகுறித்து எமனேசுவரம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். சார்பு ஆய்வாளர் சரவணன் தலைமையிலான போலீஸார் அப்பகுதி சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து தறிக்கூடம் அருகே சுற்றிய பத்திரகாளி அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த லோகநாதன் (38) என்பவரைப் பிடித்து விசாரணை செய்தனர். இதில் லோகநாதனும், பெருந்தேவி நகரைச் சேர்ந்த கண்ணன் (49) என்பவரும் சேர்ந்து பட்டு நூலைத் திருடியது தெரியவந்தது. இருவரையும் போலீஸார் கைது செய்தனர்.
சம்பவம் நடந்த 24 மணி நேரத்தில் குற்றவாளிகளைக் கைது செய்த போலீஸாரை காவல் கண்காணிப்பாளர் இ.கார்த்திக் பாராட்டினார்.