

குமாரபாளையம் அருகே படவீடு பேரூராட்சியில் ரூ.2.59 கோடி மதிப்பில் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகள் தொடக்க விழா நடந்தது. திருச்செங்கோடு கோட்டாட்சியர் ப.மணிராஜ் தலைமை வகித்தார். நெடுஞ்சாலை துறையின் மூலம் ரூ.56 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட தார்சாலை, நத்தமேடு பகுதியில் ரூ.40 லட்சம் மதிப்பிலான கால்நடை மருந்தகம் என மொத்தம் ரூ.2.59 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளை அமைச்சர் பி.தங்கமணி பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.
மேலும் படவீடு பேரூராட்சியில் கால்நடை பராமரிப்புத்துறையின் சார்பில் கோழி அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் 400 பயனாளிகளுக்கு தலா 25 கோழிக்குஞ்சுகள் வழங்கப்பட்டன. கால்நடைத்துறை மண்டல இணை இயக்குநர் வி.பி.பொன்னுவேல், பேரூராட்சிகள் உதவி இயக்குநர் கோ.கனகராஜ், கால்நடைத்துறை உதவி இயக்குநர் அருண் பாலாஜி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஸ்டாலினுக்கு பதிலடி
தமிழக முதல்வர் பழனிசாமியின் ஆட்சியை குறை கூறுவதற்கு ஸ்டாலினிடம் ஒன்றுமில்லை. அரசியல் காரணங்களுக்காக ஸ்டாலின், அரசை குற்றம் சாட்டி வருகிறார்.
என் மீதும், அமைச்சர் வேலுமணி மீதும் உள்ள தனிப்பட்ட வன்மம் காரணமாக விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும் என கூறியிருக்கிறார்.
எங்களுக்கு மடியில் கனமில்லை வழியில் பயமில்லை. நிலக்கரி குறித்து நீதிமன்றத்தில் வழக்கு உள்ள காரணத்தினால் அது குறித்து பேச விரும்பவில்லை. கொங்கு மண்டலம் பின் தங்கியுள்ளதாக ஸ்டாலின் கூறுகிறார்.
கொங்கு மண்டலத்தை பொருத்தவரை திமுக வேண்டுமானால் பின் தங்கலாம். வளர்ச்சித் திட்டங்கள் பின் தங்கவில்லை, என்றார்.