

எடப்பாடியை அடுத்த கொங்கணாபுரம் வட்டாரத்தைச் சேர்ந்த விவசாயிகள் பட்டறிவு மற்றும் கண்டுணர்வு பயணத்தில் பங்கேற்க வேளாண் துறை அழைப்பு விடுத்துள்ளது.
இதுதொடர்பாக வேளாண் உதவி இயக்குநர் சாகுல் அமீத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
கொங்கணாபுரம் வட்டாரத் தில் அட்மா திட்டத்தின் சார்பில் மாநிலத்துக்குள் விவசாயிகள் பட்டறிவு பயணம் மற்றும் கண்டுணர்வு பயணம் மேற்கொள்ள நிதி பெறப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக விவசாயிகள் ஆலோசனைக்குழு மற்றும் தொழில்நுட்பக் குழு ஆகியவற்றின் ஒப்புதல் பெறப் பட்டுள்ளது.
பட்டறிவு மற்றும் கண்டுணர்வு பயணத்தில் பங்கேற்க தகுதியான விவசாயிகள், உழவன் செயலி வாயிலாக அட்மா பயிற்சி மற்றும் செயல் விளக்கம் என்ற இனத்தை தேர்வு செய்து தங்களது சுயவிவரத்தை பதிவு செய்ய வேண்டும்.
விவசாயியின் பெயர், ஆதார் எண், தொலைபேசி எண், புல எண், உட்பிரிவு எண் பரப்பு (ஏக்கர்) மற்றும் சாகுபடி பயிர் ஆகியவற்றை குறிப்பிட்டு பதிவு செய்து விவசாயிகள் தங்களுக்கு தேவையான இனத்தை தேர்வு செய்து பயனடையலாம்.
அட்மா திட்டத்தில் பயன் பெறும் அனைத்து விவசாயிகளும் உழவன் செயலி வாயிலாக மட்டுமே பயனடைய முடியும். தற்போது, மானாவாரி தொழில்நுட்பம் தொடர்பான வெளிமாவட்ட பயிற்சி, கோழி வளர்ப்பு கண்டுணர்வு பயணம், செயல்விளக்கம் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மேலும், விவரங்கள் அறிய அட்மா திட்ட வட்டார தொழில்நுட்ப மேலாளரை 90922 46333 என்ற செல்போன் எண்ணிலும், உதவி தொழில்நுட்ப மேலாளரை 82200 04695 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார்.