

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தமிழக அரசால் செயல்படுத்தப்படும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் (NEEDS) திட்டத்தின் மூலம் பட்டம், பட்டயம் மற்றும் தொழிற்கல்வி படித்த முதல் தலைமுறை தொழில் முனைவோர் சுயமாக தொழில் தொடங்க வசதி செய்யப்பட்டுள்ளது.
வயது வரம்பு: பொதுப் பிரிவினருக்கு 21-க்கு மேல் 35-க்குள் இருத்தல் வேண்டும். சிறப்பு பிரிவினர்களான மகளிர், ஆதி திராவிடர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், முன்னாள் ராணுவத்தினர், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு அதிகபட்ச வயது 45 ஆகும். ஆண்டுவருமானம் உச்ச வரம்பு ஏதுமில்லை.பயனாளிகள் 3 ஆண்டுகளுக்கு குறையாமல் தமிழகத்தில் வசிப்பவராக இருக்க வேண்டும்.
அனைத்து உற்பத்தி மற்றும் சேவை சார்ந்த தொழில்கள் தொடங்க 25 சதவீதம் அரசு மானியம், அதிகபட்சம் ரூ.30 லட்சம் என இதுவரை இருந்த நிலையில் தற்போது தமிழக அரசு மானியத்தை ரூ.50 லட்சமாக உயர்த்தி அரசாணை வெளியிட்டுள்ளது. எனவே, இத்திட்டத்தின் கீழ் ரூ.10 லட்சத்துக்கு மேல் அதிகபட்சம் ரூ.5 கோடி வரை கடன் பெற்று அதிகபட்ச மானியம் ரூ.50 லட்சம் வரை பெறலாம்.
இத்திட்டத்தில் அரிசி ஆலை, மர இழைப்பகம், மாவு, மிளகாய், எண்ணெய் அரைக்கும் ஆலை, லேத் இயந்திரம், அட்டைப்பெட்டி தயாரித்தல், உப்பு அரைத்தல், கடலைமிட்டாய் தயாரித்தல், கால்நடை தீவனம் தயாரித்தல், பவர் லாண்டரி, ஸ்கேன் சென்டர், பிஸியோதெரபி கிளினிக், ஹாலோபிளாக் மற்றும் பிளை ஆஷ் பிரிக்ஸ், ஜிம் சென்டர் (ஆண், பெண்), ஆயத்த ஆடைகள் தயாரிப்பு, ஸ்டீல் கட்டில் பீரோ தயாரித்தல் மற்றும் சேவை சார்ந்த தொழில்களும் தொடங்கலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கப்படும் தகுதிவாய்ந்த விண்ணப்பங்கள் நேர்முகத் தேர்வின்றி நேரடியாக வங்கிக்கு பரிந்துரைக்கப்படும். திட்ட மதிப்பீட்டில் பொதுப் பிரிவினர் 10 சதவீதமும், சிறப்பு பிரிவினர் 5 சதவீதமும் தங்களது பங்காக முதலீடு செய்ய வேண்டும். தவணை தவறாமல் கடனைத் திருப்பிச் செலுத்தும் தொழில் முனைவோருக்கு கூடுதல் சலுகையாக 3 சதவீத பின்முனை வட்டி மானியம் வழங்கப்படும். கரோனா ஊரடங்கால் தொழில்முனைவோர் பயிற்சியிலிருந்து மார்ச் 2021 வரை அரசால் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் இத்திட்டத்தின்கீழ் பயன்பெற விரும்புவோர் www.msmeonline.tn.gov.in/needs என்ற இணையதள முகவரியில் விண்ணப்பத்தை உரிய ஆவணங்களுடன் பதிவேற்றம் செய்ய வேண்டும். மேலும் விவரங்களுக்கு பொதுமேலாளர், மாவட்ட தொழில் மையம், புறவழிச்சாலை, தூத்துக்குடி (0461-2340053, 2340152) என்ற முகவரியில் அணுகி பயனடையலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.