

வேலூர் அடுத்த பாலமதி மலைப் பாதையில் ஏற்பட்ட நிலச்சரிவால் போக்குவரத்தை சரி செய்ய ராட்சத பாறைகள் வெடிவைத்து தகர்க்கும் பணி நேற்று தொடங்கியது.
வேலூர் மாவட்டத்தில் ‘நிவர்’ புயல் காரணமாக, கடந்த 25-ம் தேதி இரவு பெய்த கன மழையால் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மரங்கள் சாய்ந்ததுடன், வீடுகளும் இடிந்து சேதமடைந்தன. வேலூர் ஓட்டேரியில் இருந்து பாலமதி கிராமத்துக்கு செல்லக்கூடிய மலைப்பாதையில் திடீர் நிலச்சரிவு ஏற்பட்டது.
மேலும், மலைப்பாதையின் ஓரிடத்தில் பெரிய பாறை உருண்டு சாலையில் விழுந்ததால் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டது.
தொடர் மழை காரணமாக எந்த நேரத்திலும் சாலையில் பெரிய, பெரிய பாறைகள் உருண்டு விழும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, ராட்சத பாறைகளை வெடி வைத்து அகற்ற வேண்டும் என பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப் பட்டது.
இதைத்தொடர்ந்து, வேலூர் மாவட்ட வனஅலுவலர் பார்கவ தேஜா, வேலூர் நெடுஞ்சாலைத் துறை உதவி கோட்ட பொறியாளர் அண்ணாமலை, வட்டார வளர்ச்சி அலுவலர் கனகவள்ளி ஆகியோர் ஆய்வு செய்தனர். தொடர்ந்து, ராட்சத பாறைகள் நேற்று வெடி வைத்து தகர்க்கும் பணி நேற்று தொடங்கியது.