

தொடர் மழையால் பல குடியிருப்புகளில் தண்ணீர் புகுந்துள்ளது. இதில் முக்கிய ஆவணங்கள், கல்விச் சான்றிதழ்கள் சேதம் அடைந்திருக்கலாம். அல்லது தண்ணீரில் அடித்துக் கொண்டு போய் இருக்கலாம்.
இதுபோன்ற சமயங்களில் இளைஞர்கள், பெற்றோர் மனம் உடைந்துவிட வேண்டாம். எந்த ஆவணம் (அ) சான்றிதழாக இருந்தாலும், முறையாக விண்ணப்பித்து, புதிய சான்றிதழ் பெற்றுக் கொள்ள முடியும். இதற்கான வழிகள், அந்தந்த துறை இணையத்திலேயே விவரம் தரப்பட்டுள்ளன.
இதுதொடர்பாக பொது மக்களுக்கு உதவும் பொருட்டு, எழுத்தாளர், கட்டுரையாளர் பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி, அரசு/ பொதுப் பணியில் உள்ள 20 பேரைக் கொண்டு குழு அமைத்துள்ளார். இவர் முன்னாள் வருமான வரி அதிகாரி, போட்டித் தேர்வுகளுக்கு இலவசப் பயிற்சியாளர்.
சில ஆண்டுகளுக்கு முன் சென்னையில் வெள்ளம் வந்தபோதும் இவரது நண்பர் குழு இதேபணியை, முன்னணி செய்தித் தொலைக்காட்சி மூலம் சிறப்பாகச் செய்தது. ஏராளமானோர் இத னால் பயன் பெற்றனர்.
இந்த இலவச சேவைக்கு certificatesplease@gmail.com என்ற பிரத்யேக மின்னஞ்சல் முகவரி உருவாக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டோர் இந்த மின்னஞ்சலுக்கு தகவல் அனுப்பலாம்.
குழுவின் உறுப்பினர்கள் தொடர்புகொண்டு, சட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு, மாற்றுச் சான்றிதழ் பெறுவதற்கான வழிகாட்டுதல் அளிப்பார்கள். பாதிக்கப்பட்டோர் நேரடியாக அரசுத் துறைகளை அணுக வேண்டும். இதில்குழுவின் உறுப்பினர்கள் தலையிடமாட்டார்கள்
சான்றிதழ் வழிகாட்டிக் குழு,நவ.27-ம் தேதி காலை 6 மணி முதல் டிச.31 நள்ளிரவு வரை செயல்படும். மேலும் விவரங்களுக்கு – பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி. certificatesplease@gmail.com