

'நிவர்' புயலால் பாதிக்கப்பட்ட 28,190 பேர் 583 மையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக விழுப்புரம் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
மரக்காணம் அருகே நேற்று அதிகாலை 'நிவர்' புயல் கரையை கடந்தது. இதில் விழுப்புரம் அருகே கோனூர் கிராமத்தைச் சேர்ந்த ராஜேஸ்வரி என்பவர் சுவர் இடிந்து விழுந்ததில் உயிரிழந்தார். மாவட்டத்தில் 48 குடிசைகள் முழுமையாகவும், 83 குடிசைகள் பகுதியும் சேதமடைந்துள்ளன. 17 வீடுகள் சேதமடைந்துள்ளன. 1,600 கோழிகள், 2 பசுக்கள், 1 ஆடு, 3 கன்று குட்டிகள் பாதிக்கப்பட்டுள்ளன.
மாவட்டம் முழுவதும் 11,908 குடும்பங்களைச் சேர்ந்த 10,861 ஆண்கள், 12,030 பெண்கள், 5,299 குழந்தைகள் என 28,190 பேர் 583 மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். புயல் பாதிப்பையையொட்டி மாவட்டம் முழுவதும் 12 சுகாதார மையங்கள், 27 நடமாடும் மையங்கள் மூலம் 1,620 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. 194 மரங்கள், 74 மின் கம்பங்கள், மொத்தம் ஒரு கிலோ மீட்டர் நீளமுள்ள மின்சார கம்பிகள், 17 மின்மாற்றிகள் சேதமடைந்துள்ளன. 5 ஏக்கர் நெற்பயிர், ஒரு படகு, 18 கிலோமீட்டர் சாலை, 1,045 தெருவிளக்குகள் சேதமடைந்துள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.