

ஓசூரில் இந்து மகா சபை செயலாளர் கொலை செய்யப்பட்ட வழக்கில், ஊத்தங்கரை நீதிமன்றத்தில் நேற்று 3 பேர் சரண் அடைந்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அனுமந்த நகரைச் சேர்ந்தவர் நாகராஜ் (எ) வில்லங்கம் நாகராஜ் (46). இவர், தமிழ்நாடு இந்து மகாசபை அமைப்பின் மாநில செயலாளராக இருந்து வந்தார். ஓசூரில் ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வந்தார். இந்நிலையில் கடந்த 22-ம் தேதி காலை 8.30 மணியளவில் நடைபயிற்சி மேற்கொண்டிருந்த நாகராஜை, காரில் வந்த 6 பேர் கொண்ட கும்பல் வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றது.
இக்கொலை வழக்கு குறித்து ஓசூர் அட்கோ போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், நாகராஜ் கொலை வழக்கு தொடர்பாக நேற்று ஊத்தங்கரையில் உள்ள குற்றவியல் நீதிமன்றத் தில் நேற்று 4 பேர் சரண் அடைய வந்தனர். அவர்களில் ஒருவரை அங்கிருந்த போலீஸார் கைது செய்தனர். இதனைத் தொடர்ந்து ஓசூர் அனுமந்தபுரம் பகுதியைச் சேர்ந்த ரமேஷ் (39), அருண் (27), 16 வயதுடைய சிறுவன் ஆகியோர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.
அவர்களை ஓசூர் கிளைச்சிறையில் அடைக்க நீதித்துறை நடுவர் உத்தரவிட்டார். கைது செய்யப்பட்ட வரிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். தலைமறை வாக உள்ள 2 பேரை போலீஸார் தேடி வருகின்றனர்.