

மானாமதுரையில் 75 ஆண்டுகள் பழமையான வாரச் சந்தை கடைகள் இடிக்கப்பட்டு, புதிதாக ரூ.2.50 கோடியில் கடைகள் அமைக்கப்பட உள்ளன.
மானாமதுரையில் சுதந்திரத்துக்கு முன்பாக 1944-ம் ஆண்டில் இருந்து 2.5 ஏக்கரில் வாரச்சந்தை செயல்பட்டு வருகிறது. 75 ஆண்டுகளுக்கு மேலாக செயல்படும் இங்கு 150-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. வாரந்தோறும் வியாழக்கிழமை கூடும் இச்சந்தையில் மதுரை, சோழவந்தான், திருப்புவனம், திருப்பாச்சேத்தி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகள் காய்கறி, பழங்களை விற்பனை செய்கின்றனர்.
இந்நிலையில் கடைகள் முழுவதும் சேதமடைந்ததால் அவற்றை இடித்துவிட்டு உழவர் சந்தை போன்ற மாதிரி வடிவத்தில் கடைகளை அமைக்க பேரூராட்சி நிர்வாகம் திட்டமிட்டது. ரூ.2.5 கோடியில் மொத்தம் 190 கடைகள் கட்டப்பட உள்ளன. மேலும் கழிப்பறை, தண்ணீர் வசதியும் அமைக்கப்படுகிறது. இதற்காக நேற்று பழைய கடைகள் ஜேசிபி இயந்திரங்கள் மூலம் இடிக்கப்பட்டன.
புதிய கடைகள் கட்டும் பணியை வரும் மே மாதத்துக்குள் நிறைவு செய்ய பேரூராட்சி அதிகாரிகள் திட்ட மிட்டுள்ளனர்.