முகூர்த்த நாளை முன்னிட்டு சேலத்தில் குண்டுமல்லி ரூ.2,000-க்கு விற்பனை

முகூர்த்த நாளை முன்னிட்டு சேலத்தில் குண்டுமல்லி ரூ.2,000-க்கு விற்பனை
Updated on
1 min read

நாளை (26-ம் தேதி) கார்த்திகை மாத வளர்பிறை முகூர்த்தம் என்பதால், சேலத்தில் பூக்களின் விலை அதிகரித்தது. குறிப்பாக குண்டு மல்லி கிலோ ரூ.2 ஆயிரத்துக்கு விற்பனையானது.

முகூர்த்த நாட்கள், திருவிழா காலங்களில் வழிபாடு, அலங்காரம் ஆகியவற்றுக்கு பூக்களின் தேவை அதிகரிக்கும். இதனால், இந்நாட்களில் பூக்கள் விலை வழக்கத்தை விட அதிகரிக்கும். நாளை (26-ம் தேதி) கார்த்திகை மாத வளர்பிறை முகூர்த்தம் என்பதால், சேலம் வஉசி பூ மார்க்கெட்டில் நேற்று பூக்களின் விலை அதிகரித்து இருந்தது.

இதுதொடர்பாக பூ வியாபாரிகள் கூறியதாவது:

நாளை (26-ம் தேதி) கார்த்திகை மாத வளர்பிறை முகூர்த்தம் என்பதாலும், அதன் பின்னர் தேய்பிறை, மார்கழி மாதத்தில் முகூர்த்தம் இல்லை. அடுத்து தை மாதத்தில் முகூர்த்த நாட்கள் வருவதால், நாளைய முகூர்த்தத்தில் ஏராளமான திருமணங்கள், புதுமனை புகு விழாக்கள் என மங்கள நிகழ்ச்சிகள் அதிகமாக நடைபெறவுள்ளன. இதனால், பூக்களின் தேவை அதிகரித்துள்ளது.

மழை மற்றும் பனிப்பொழிவு காரணமாக பூக்களின் வரத்து குறைந்துள்ளதால், பூக்களின் விலை அதிகரித்துள்ளது.

குண்டுமல்லி கிலோ ரூ.2 ஆயிரம் (கடந்த வாரம் ரூ.800), சன்னமல்லி ரூ.1,000 (ரூ.400), ஜாதி மல்லி ரூ.600 (ரூ.200), கனகாம்பரம் ரூ.1,600 (ரூ.800), காக்கட்டான் ரூ.700 (ரூ.240), சம்பங்கி ரூ.200 (ரூ.50), நந்தியாவட்டம் ரூ.600 (ரூ.70), ரோஜா கட்டு ரூ.250 (ரூ.120), சாமந்தி ரூ.250 (ரூ.120) என பூக்களின் விலை கடந்த வாரத்தை விட அதிகரித்தது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in