திருப்பூர் மாவட்டத்தில் மாநகராட்சி, அரசுப் பள்ளிகளில் படித்து மருத்துவம் படிக்க தேர்வான மாணவிகளுக்கு பாராட்டு

திருப்பூர் மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளில் படித்து மருத்துவம் படிக்க தேர்வான மாணவிகள்.  படம்: இரா.கார்த்திகேயன்.
திருப்பூர் மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளில் படித்து மருத்துவம் படிக்க தேர்வான மாணவிகள். படம்: இரா.கார்த்திகேயன்.
Updated on
1 min read

திருப்பூர் மாவட்டத்தில் அரசு மற்றும் மாநகராட்சி பள்ளிகளில் படித்து, 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டில் மருத்துவம் படிக்க தேர்வான 15 மாணவிகளை, மாவட்ட ஆட்சியர் க.விஜயகார்த்திகேயன் பாராட்டினார்.

சென்னையில் நடந்த 2020-21-ம் ஆண்டுக்கான மருத்துவக் கலந்தாய்வில் பங்கேற்று, மருத்துவப் படிப்புக்கு தேர்வான திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த மாணவிகள் சோபிகா, நந்தினி, லாவண்யா, கோகில்வேணி (ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளி), கெளசல்யா (பல்லடம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி), சந்தியா, ஜெய, ஷிபானா (பழநியம்மாள் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளி), காவியா (ஊத்துக்குளி பெண்கள் மேல்நிலைப் பள்ளி), நர்மதா (கணக்கம்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளி), ஹரிப்பிரியா, மஞ்சுளாதேவி (வெள்ளிரவெளி அரசு மேல்நிலைப் பள்ளி), திவ்யா (அய்யங்காளிபாளையம் வி.கே.அரசு மேல்நிலைப் பள்ளி), கார்த்திகா (குண்டடம் அரசு மாதிரிப் பள்ளி), பானுமதி (புதுப்பை அரசு மேல்நிலைப் பள்ளி) ஆகிய 15 பேரை ஆட்சியர் அலுவலகத்துக்கு அழைத்து ஆட்சியர் பாராட்டினார்.

திருப்பூர் மாவட்டத்தில் நீட் தேர்வு எழுதிய 110 பேரில், இந்த 15 பேர் தகுதி பெற்று மருத்துவக் கல்லூரிகளில் இணைந்துள்ளனர்.

பின்னர் ஆட்சியர் பேசும்போது, "இது வாழ்வின் முதல்படிதான். இதில் பல்வேறு பிரிவுகள் உள்ளன. அவற்றை படிக்கவும், விரும்பிய துறையில் சாதிக்கவும் இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்த வேண்டும். இது வாழ்வின் நல்ல தொடக்கமும்கூட. மருத்துவம் படிக்க தேர்வான 15 பேரும் பெண்கள் என்பது மற்றொரு மகிழ்ச்சியான விஷயம். இவர்களுக்கு பக்கபலமாக இருந்த பெற்றோர் மற்றும் ஆசிரி யர் அனைவருக்கும் பாராட்டுகள்" என்றார்.

மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் இரா.ரமேஷ், போட்டித்தேர்வு பயிற்சி ஒருங்கிணைப்பாளர் சுரேஷ், சுற்றுச்சூழல் ஒருங்கிணைப் பாளர் ராமகிருஷ்ணன், முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் தனலெட்சுமி உட்பட பலர் பங்கேற்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in