

மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்களுக்கு அரசுப் பணி வழங்கக்கோரிய மனுவுக்கு தமிழக விளையாட்டுத் துறைச் செயலர் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மதுரை கண்ணனேந்தலைச் சேர்ந்த பரசுராமன், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு:
மாற்றுத்திறன் விளையாட்டு வீரர்களுக்கு 23 ஆண்டுகளாக இலவசமாக பயிற்சி அளித்து வருகிறேன். மாற்றுத்திறன் விளையாட்டு வீரர்களில் ஒருவரான குருநாதன், சர்வதேச மற்றும் தேசிய அளவில் நடைபெற்ற போட்டிகளில் 26 பதக்கங்கள் பெற்றுள்ளார். அவர் தற்போது அரசுத் துறையில் தற்காலிக பணியாளராகப் பணிபுரிந்து வருகிறார். அவருக்கு நிரந்தர பணி வழங்க வேண்டும். இவரைப் போல் சாதனை படைத்து வேலைவாய்ப்பின்றி இருக்கும் மற்ற மாற்றுத்திறன் விளை யாட்டு வீரர்களுக்கும் அரசுப் பணி வழங்க உத்தரவிட வேண்டும் என தெரிவித்துள்ளார். இந்த மனுவை நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி விசாரித்தனர். மனு தொடர்பாக விளையாட்டுத் துறை செயலர், ஆணையர் ஆகியோர் பதில் மனுத் தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை 2 வாரத்துக்கு ஒத்திவைத்தனர்.