

சேலம் மாநகராட்சியின் 10 ஆரம்ப சுகாதார நிலையங்களில் கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக ரூ.2 லட்சம் மதிப்பில் கை கழுவும் அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
சேலம் குகை வரதம்மாள் வார்டு ஆரம்ப சுகாதார நிலையத்தில், ரோட்டரி சங்கம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள கை கழுவும் வசதியை மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் தொடங்கி வைத்து பேசியதாவது:
சேலம் மாநகராட்சி 10 ஆரம்ப சுகாதார நிலையங்களில் சுமார் ரூ. 2 லட்சம் செலவில் கைகழுவும் வசதியை ரோட்டரி சங்கம் ஏற்படுத்தியுள்ளது. கரோனா தடுப்பு நடவடிக்கையாக பொதுமக்கள் பொதுவெளிகளில் வரும்போது முகக் கவசம் அணிந்தும், சமூக இடைவெளியினை கடைபிடிக்க வேண்டும். அடிக்கடி சோப்பை பயன்படுத்தி கைகளைக் கழுவ வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில், கர்ப்பிணி பெண்களுக்கு, அம்மா குழந்தைகள் நல பரிசுப் பெட்டகங்களை, மாநகராட்சி ஆணையர் வழங்கினார். நிகழ்ச்சியில் மாநகர பொறியாளர் அசோகன், மாநகர நல அலுவலர் பார்த்திபன், உதவி ஆணையாளர் (பொ) ரமேஷ்பாபு, சேலம் ரோட்டரி சங்கத் தலைவர் ஸ்ரீனிவாசன், செயலாளர் தமிழ் மோகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இதனிடையே, சேலம் மாநகராட்சி சார்பில் தூய்மை பாரத இயக்கத்தின் கீழ் பொதுமக்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் அம்மாப்பேட்டை அய்யாசாமி பூங்கா வளாகத்தில் ஆணையர் ரவிச்சந்திரன் தலைமையில் நடந்தது.
பட விளக்கம்:
தூய்மை பாரத இயக்கத்தின் கீழ் சேலம் அம்மாப்பேட்டை அய்யாசமி பூங்கா வளாகத்தில் விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. இதில், கரோனா தொடர்பான கேள்விகளுக்கு பதில் அளித்த பெண்களுக்கு மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் பரிசு வழங்கினார்.