

மயானப்பாதை கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்தவர்களை காவல் துறையினர் தடுத்ததால் அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட இடையஞ்சாத்து இந்திரா நகர் அருந்ததியர் வசிக்கும் பகுதியில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் உள்ளனர். இப் பகுதி மக்களுக்கான மயானத் துக்கு உரிய பாதை வசதி இல்லை. இது தொடர்பாக பல முறை புகார் மனு அளித்தும், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வில்லை என கூறப்படுகிறது.
இந்நிலையில், அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் 50-க்கும் மேற்பட்டோர் நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க திரளாக வந்தனர். அவர்களை, காவல் துறையினர் தடுத்து நிறுத்தினர். அப்போது, மனு அளிக்க வந்தவர்கள் காவல் துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர், அவர்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். பின்னர் நடந்த பேச்சு வார்த்தையில் முக்கிய நபர்கள் மட்டும் மனு அளிக்க ஆட்சியர் அலுவலகத்துக்குள் செல்ல அனு மதிக்கப்படுவார்கள் என காவல் துறையினர் தெரிவித்தனர்.
இதனையேற்று, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். மேலும், மயான பாதை பிரச்சினையை தீர்க்காவிட்டால் தொடர் போராட்டம் நடத் தப்படும் என்று தெரிவித்துள்ளனர்.