மேட்டூர் உபரிநீர் திட்டத்துக்கு எதிரான வழக்கை திரும்ப பெற வலியுறுத்தல்
சேலம் மாவட்ட மக்களின் நீண்ட கால கோரிக்கைக்கு தீர்வாக செயல்படுத்தப்படும் மேட்டூர் உபரிநீர்த் திட்டத்தை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பி.ஆர்.பாண்டியன் தொடர்ந்த வழக்கை திரும்பப் பெற தமிழக தலைவர்கள் வலி யுறுத்த வேண்டும் என காவிரி உபரிநீர் நடவடிக்கைக் குழு வலியுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக, காவிரி உபரிநீர் நடவடிக்கைக் குழு ஒருங்கிணைப்பாளர் இரா.தம்பையா கூறியதாவது:
சேலம் மாவட்ட விவசாயிகளின் நீண்ட நாளைய கனவுத் திட்டமான காவிரி உபரிநீர்த் திட்டத்தை, காவிரி டெல்டா பாசன பாதுகாப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் தொடர்ச்சியாக எதிர்த்து வருவது கண்டனத்துக்கு உரியது. சேலம் மாவட்டத்தில் மேட்டூர் அணை இருந்தும், சேலம் மாவட்டத்தில் எந்த பாசனத் திட்டமும் இல்லை.
சேலம் மாவட்ட மக்களின் நீண்ட கால கோரிக்கையை ஏற்று, தமிழக அரசு மேட்டூர் உபரிநீர்த் திட்டத்தை தொடங்கியுள்ளது. இது ஆண்டுக்கு ஒரு டிஎம்சியை விட குறைவான 0.555 மில்லியன் கன அடிநீர் மட்டுமே பயன் படுத்தப்படக் கூடிய மிகச்சிறிய திட்டமாகும்.
இதை இத்திட்டத்தை எதிர்த்து வழக்கு தொடுத்துள்ள பி.ஆர். பாண்டியன் புரிந்து கொள்ள வேண்டும். இத்திட்டத்தை, இரு மாநிலங்களுக்கு இடையே பகையை வளர்க்கும் அளவுக்கு எடுத்துச் சென்றுவிடக் கூடாது. எனவே, மேட்டூர் உபரிநீர் திட்டத்தை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தொடர்ந்துள்ள வழக்கை பி.ஆர்.பாண்டியன் திரும்பப் பெற தமிழக தலைவர்கள் அனைவரும் வலியுறுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
