

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் திருக்கார்த்திகைக்காக இந்த ஆண்டு முருகன், விநாயகர் சிலைகளுடன் கூடிய அகல் விளக்குகள் தயாராகி வருகின்றன.
மண்பாண்டத் தொழிலுக்கு புகழ்பெற்ற ஊர் மானாமதுரை. இந்த ஊரில் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள், மண்பாண்டத் தொழிலில் ஈடுபட்டு வருகின்றன. இங்கு சீசனுக்கு ஏற்ப அக்னிச் சட்டிகள், மண் அடுப்புகள், கூஜாக்கள், குருவிக் கூடுகள், கலைநயமிக்க அலங்காரப் பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு மண்பாண்டப் பொருட்களை தயாரிக்கின்றனர்.
இந்த ஆண்டு திருக்கார்த்திகைக்காக சர விளக்குகள், அணையா விளக்குகள், துளசி மாடம், கணினி விளக்கு, ஐந்து முக குருவாயூர் விளக்கு, நட்டு விளக்கு, அகல் விளக்குகள், தேங்காய் முக விளக்குகள், முருகன், விநாயகர் சிலைகளுடன் கூடிய அகல் விளக்குகள் தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு தயாராக உள்ளன.
சிவகங்கை மாவட்டம் மட்டுமின்றி, தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து விளக்குகளை வாங்குவதற்கு ஆர்டர்கள் குவிந்து வருகின்றன. கரோனாவால் முடங்கியிருந்த மண்பாண்டத் தொழில் தற்போது மீண்டும் மும்முரம் அடையத் தொடங்கி உள்ளது.