

சம்பா நெற்பயிர் மற்றும் ரஃபிப்பருவ பயிர்களுக்கான பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் விவசாயிகள் சேர்ந்து பயன் பெற வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக சேலம் மாவட்ட ஆட்சியர் ராமன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
பிரதமர் பயிர் காப்பீட்டுத் திட்டம் சேலம் மாவட்டத்தில் மத்திய அரசின் கூட்டுறவுத்துறை நிறுவனமாகிய இப்கோ நிறுவனத்தால் ஊக்குவிக்கப்படும் இப்போ-டோக்கியோ பொது காப்பீட்டு நிறுவனத்தால் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
தற்போது, சிறப்பு பருவம் மற்றும் ரஃபி 2020-2021 ஆண்டுக்கான அறிவிக்கை அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதன் படி, பயிர் காப்பீடு செய்ய கடைசி நாள் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி நெல் (சம்பா), தட்டைப்பயறு ஆகியவற்றுக்கு நவம்பர் 30-ம் தேதி, சோளம் - டிசம்பர் 21-ம் தேதி, உளுந்து மற்றும் ராகிக்கு டிசம்பர் 31-ம் தேதி, நிலக்கடலைக்கு ஜனவரி 20-ம் தேதி, நெல் (நவரை) மற்றும் மக்காசோளத்துக்கு III பிப்ரவரி 15-ம் தேதி, எள்ளுக்கு மார்ச் 1-ம் தேதி, பருத்திக்கு மார்ச் 31-ம் தேதி, கரும்புக்கு அக்டோபர் 31-ம் தேதி, வெண்டை மற்றும் வெங்காயத்துக்கு பிப்ரவரி 15-ம் தேதி, வாழை, மரவள்ளி மற்றும் தக்காளிக்கு மார்ச் 1-ம் தேதி என பயிர் வாரியாக காலக்கெடு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
மேலும் ஒரு ஏக்கருக்கு நெல் (சம்பா) மற்றும் நெல் (நவரை) - ரூ. 494, மக்காசோளத்துக்கு ரூ. 227, உளுந்துக்கு ரூ.192, நிலக்கடலைக்கு ரூ.286, கரும்புக்கு ரூ. 2,875, பருத்திக்கு ரூ. 695, ராகிக்கு ரூ.133, சோளத்துக்கு ரூ.119, தட்டைப்பயறுக்கு ரூ.192 எள்ளுக்கு ரூ.118, வெண்டை ரூ.1,168, வெங்காயம் -ரூ. 1,828, வாழை ரூ.3,230, மரவள்ளி ரூ.2,100, தக்காளி ரூ.920 என காப்பீடு கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இதுவரை இத்திட்டத்தின் கீழ் பதிவு செய்யாத விவசாயிகள் அனைவரும் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள், வங்கிகள் மற்றும் பொது சேவை மையங்கள் மூலமாக பயிர் காப்பீடு செய்து கொள்ளலாம்.
விவசாயிகள் இத்திட்டத்தின் கீழ் பதிவு செய்யும்போது, முன்மொழிவு விண்ணப்பத்துடன், பதிவு விண்ணப்பம், கிராம நிர்வாக அலுவலர் வழங்கும் அடங்கல், விதைப்பு அறிக்கை, வங்கிக் கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல், ஆதார் அட்டை நகல் ஆகிய ஆவணங்களுடன் தவணைத் தொகையை செலுத்திய பின்னர் அதற் கான ரசீதை தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள், வங்கிகள் மற்றும் பொது சேவை மையங்களில் பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார்.