

தமிழகத்தில் பஞ்சமி நிலங்களை மீட்க ஆணையம் அமைக்க வேண்டும் என இந்திய குடியரசு கட்சியின் தலைவர் செ.கு.தமிழரசன் தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் இந்திய குடியரசு கட்சியின் தலைவர் செ.கு.தமிழரசன் கலந்துகொண்டார்.
பின்னர், அவர் கூறும்போது, “தமிழகத்தில் பஞ்சமி நிலங்களை மீட்க புதிதாக ஆணையத்தை ஏற்படுத்த வேண்டும். தாட்கோவுக்கு தனி வங்கி ஆரம்பித்து, பட்டியலினத்தவர்களுக்கு கடன் வழங்க வேண்டும். தமிழ கத்தில் பல்கலைக்கழக துணைவேந்தராக கடந்த 4 ஆண்டுகளில் ஒரு பட்டியலினத்தவர் கூட நியமிக்கப்படாதது கண்டிக்கத்தக்கது.
ஆதிதிராவிடர்களுக்கான இட ஒதுக்கீட்டை 18 சதவீதத்தில் இருந்து 21 சதவீதமாக உயர்த்த வேண்டும். தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத் துக்கு தலைவர் மற்றும் துணைத்தலைவரை நியமிக்க வேண்டும். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் எங்களது கோரிக்கைகளுக்கு துணை நிற்பவர்களுடன் கூட்டணி அமைப்போம். தமிழக அரசின் தடை உத்தரவை மீறி பாஜகவின் வேல் யாத்திரை நடைபெறுகிறது. தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு சவாலாகவே இருக்கும்” என்றார்.