அமித்ஷா வருகையால் அரசியலில் எதுவும் நடக்காது திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் கருத்து

அமித்ஷா வருகையால் அரசியலில் எதுவும் நடக்காது  திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் கருத்து
Updated on
1 min read

தமிழகத்துக்கு அமித்ஷா வருகையால் அரசியலில் எதுவும் நடக்காது என திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ள வீட்டில் திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் நேற்று செய்தியாளர்கள் சந்திப்பில் கூறும்போது, ‘‘திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் அரசுப் பள்ளியில் படித்து உள் ஒதுக்கீட்டில் தனியர் மருத்துவக் கல்லூரியில் சேரும் மாணவர்களின் கல்விக் கட்டணத்தை திமுக ஏற்கும் என அறிவித்துள்ளார். ஒரு அரசு தான் நலிந்த பிரிவினருக்கு முன்வந்து அவர்களுக்கு உதவ வேண்டும். ஆனால், இந்த அரசு அதைப்பற்றி கவலைப்படவில்லை. ஏழை, எளிய மக்களுக்கு இருக்கும் கவலையை உணர்ந்து அவர்களுக்கு அரசு செய்ய வேண்டிய கடமையை எதிர்க்கட்சியாக இருக்கும் திமுக செய்துள்ளது. இது அரசியல் உலகில் விசித்திரம்.

அரசுப் பள்ளியில் படித்த மாணவர்கள் உள் ஒதுக்கீட்டில் 7.5 சதவீதம் பெற்றிருக்கிறார்கள் என்றால் இதற்கு முழு முயற்சி எடுத்ததும் திமுகதான். அரசுப் பள்ளியில படித்த மாணவர்களுக்கு 10 சதவீதம் உள் ஒதுக்கீடு அளிக்கலாம் என நீதிபதி கூறியுள்ளார். ஆனால், அரசோ 7.5 சதவீதம் என்று தீர்மானத்தை நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பினார்கள்.

ஆனால், ஆளுநரும் தீர்மானத்தை கிடப்பில் போட்டதால் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற போராட்டத்துக்குப் பிறகு வேறு வழியில்லாமல் அவர் கையெழுத்திட்டார். இதன் மூலம் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இந்த சலுகையாவது கிடைத்துள் ளது. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நீட்டுக்கும் முற்றுப்புள்ளி வைப்போம்.

உதயநிதி ஸ்டாலினை கைது செய்து ஹீரோவாக்கி விட்டனர். இது சர்வாதிகாரத்தின் வீழ்ச்சிக்கு அறிகுறி. உதயநிதி போகும் இடத்தில் மட்டுமா கூட்டம் வருகிறது. எடப்பாடி, செல்லூர் ராஜூ போகிற இடத்தில் கூட கூட்டம் வருகிறது.

தமிழகத்துக்கு அமித்ஷா வருகையால் அரசியலில் எதுவும் நடக்காது. மத்திய அமைச்சராக அவர் வருவது அவரது உரிமை. சென்னையில் அமித்ஷா மீது பதாகை வீசியது யாராக இருந்தாலும் ஏற்க முடியாது. அத்தகைய செயலில் யாரும் ஈடுபடக்கூடாது. தேர்வாய் கண்டிகை பெரிய ஊழல் என்பதை நான் ஏற்கெனவே கூறியுள்ளேன். அதைப்பற்றி விரைவில் கட்டுரை எழுதுகிறேன்.

தமிழகத்தில் ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமைந்ததும் முதல் பட்ஜெட்டில் காட்பாடி தொகுதிக்கு நான் அளித்த வாக்குறுதிப்படி பல்நோக்கு மருத்துவமனை என்ற அறிவிப்பை வெளியிடுவேன். எதிர்கட்சிகள் எப்போதும் குற்றம், குறையைத்தான் சொல்லுவார்கள். அரசுக்கு ஆலோசனை சொல்வதற்கு நாங்கள் இல்லை. அண்ணா அப்போதே சொன்னார் நான் லாலி பாடவில்லை என கூறியுள்ளார்.

ஜெயலலிதா அதிமுகவுக்கும் எடப்பாடி அதிமுகவுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. ஜெயலலிதா அதிகாரம் செலுத்தும் தலைவராக இருந்தார். எல்லா விஷயங்களும் அவருக்குத் தெரியும்’’ என்றார். அப்போது, வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர்ஆனந்த், அணைக்கட்டு சட்டப்பேரவை உறுப்பினர் நந்தகுமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in