

அரசு பூங்காக்களுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் முகக் கவசம் அணியாவிட்டால் ரூ.200 அபராதம் விதிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
இ-பாஸ் நடைமுறை தளர்த்தப்பட்டதால், நீலகிரி மாவட்டத்துக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. பூங்காவுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் முகக் கவசம் அணிவதில்லை என புகார் எழுந்துள்ளது.
மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: பூங்கா நுழைவுவாயிலில், கரோனா தடுப்பு விதிமுறைகள் குறித்து சுற்றுலாப் பயணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. எனினும், பூங்காவுக்குள் வரும் சுற்றுலாப் பயணிகள் பலர், புகைப்படம் எடுக்க மாஸ்க் அணியாமல் செல்கின்றனர். இதனால், தொற்று பரவும் அபாயம் உள்ளது. நீலகிரி மாவட்டத்தில் கரோனா பரவல் குறைந்துள்ளது. இருப்பினும் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பல நாடுகளில் கரோனா இரண்டாம் அலை மிகவும் ஆபத்தானதாக உள்ளதால், மக்கள் அஜாக்கிரதையாக இருக்கக்கூடாது. வீட்டிலிருந்து வெளியே வந்தால் முகக்கவசம் கட்டாயம் அணியவேண்டும். சமூக இடைவெளி, கை கழுவுதலை முறையாக பின்பற்ற வேண்டும். முகக் கவசம் அணியாத சுற்றுலாப் பயணிகளுக்கு ரூ.200 அபராதம் வசூலிக்கப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.