காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் திமுகவின் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு ஆலோசனை

காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் திமுகவின் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு ஆலோசனை
Updated on
1 min read

காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் திமுக தேர்தல் அறிக்கைதயாரிக்கும் குழுவினர் ஆலோசனை நடத்தினர். இதில் திமுகவினர் மட்டுமல்லாமல் பல்வேறு தொழிற்சங்கங்கள், அரசு ஊழியர் அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் பங்கேற்று திமுக தேர்தல் அறிக்கையில் இடம்பெற வேண்டிய தங்கள் தேவைகளை மனுக்களாக அளித்தனர்.

2021 சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவினர், மாவட்ட வாரியாக சென்று, அங்குள்ள பிரச்சினைகள் குறித்து, கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்களிடம் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் ஏனாத்தூரிலும், திருவள்ளூர் மாவட்டத்தில் பூந்தமல்லி அருகே நசரேத்பேட்டையிலும் திமுகவின் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவினர் ஆலோசனை நடத்தினர். திமுகவின் பொருளாளர் டி.ஆர்.பாலு,கொள்கை பரப்புச் செயாளர் திருச்சிசிவா, செய்தித் தொடர்பு செயலாளர் டிகேஎஸ் இளங்கோவன் ஆகியோர் இந்தக் குழுவில் இடம் பெற்றிருந்தனர்.

இந்தக் குழுவினரிடம் காஞ்சிபுரம் மாவட்ட திமுக சார்பில் காஞ்சிபுரம் நகராட்சியை மாநகராட்சியாக மாற்றுதல், உத்திரமேரூர் ஊராட்சி ஒன்றியத்தை இரண்டாக பிரித்தல், செய்யூர் அனல் மின் நிலையத்தை உடனடியாக செயல்படுத்துதல், அனைத்து வட்டத் தலைநகரங்களிலும் ஓர் அரசு கல்லூரியை உருவாக்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்கள் அளிக்கப்பட்டது.

இந்தக் கருத்து கேட்பு நிகழ்ச்சியின்போது மக்களவை உறுப்பினர் செல்வம், தெற்கு மாவட்டச் செயலரும் உத்திரமேரூர் எம்எல்ஏவுமான க.சுந்தர், ஆலந்தூர் எம்எல்ஏவும் வடக்கு மாவட்டச் செயலருமான தா.மோ.அன்பரசன், மாநில மாணவரணிச் செயலர் சி.வி.எம்.பி.எழிலரசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

நசரேத்பேட்டையில் நடைபெற்ற கூட்டத்தில், திருவள்ளூர் மத்திய,கிழக்கு மற்றும் மேற்கு மாவட்டங்களின் திமுக பொறுப்பாளர்களான ஆவடி சா.மு.நாசர், டி.ஜெ.கோவிந்தராசன், எம்.பூபதி, திமுகவின் உயர்நிலை செயல் திட்டக் குழு உறுப்பினர் கும்மிடிப்பூண்டி கி.வேணு, திமுக எம்எல்ஏக்களான ஆ.கிருஷ்ணசாமி, வி.ஜி.ராஜேந்திரன், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் ஜி.உமாமகேஸ்வரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அவர்கள், பூந்தமல்லி மற்றும்திருவள்ளூரில் அரசு கலை அறிவியல் கல்லூரிகள், புட்லூரில் அரசுவேளாண்மை கல்லூரி அமைக்கவேண்டும், பூந்தமல்லி நகராட்சியில் பாதாள சாக்கடை திட்டத்தை விரைவில் முடிக்கவேண்டும் உள்ளிட்ட நீண்ட கால கோரிக்கைகள் குறித்து, எடுத்துரைத்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in