

மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் இணையவழியில் கல்விக் குழு கூட்டம் துணைவேந்தர் எம்.கிருஷ்ணன் தலைமையில் நடந்தது.
கவுன்சில் உறுப்பினர்கள், பதிவாளர் வசந்தா உள்ளிட்டோர் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் 2020-2021-ம் கல்வியாண்டில் வேலை வாய்ப்புகளை உருவாக்கும் வகையில் இளநிலை, முதுநிலை தொடர்பான புதிய பாடப் பிரிவுகளை அறிமுகம் செய்வது, பாடத் திட்டங்களில் மாற்றம், செனட் தேர்தல் உள்ளிட்ட கருத்துகள் விவாதிக்கப்பட்டன.
3 ஆண்டு படிப்பான எம்சிஏ-வை 2 ஆண்டாகக் குறைப்பது உட்பட 10 புதிய பாடப்பிரிவுகள் மற்றும் பல்கலை.யில் 364 ஆசிரியரல்லாத பணியிடங்களையும், 114 ஆசிரியர் பணியிடங்களையும் விரைவில் நிரப்புவது, முனைவர் பட்ட ஆராய்ச்சிக்காக ஆண்டுக்கு இரு முறை நுழைவுத் தேர்வு நடத்துவது போன்ற நடவடிக்கைகளுக்கு ஒப்புதல் பெற்றப்பட்டது. முன்னதாக, கல்விக்குழுவுக்கு தேர்வான புதிய உறுப்பினர்கள் அறிமுகம் செய்யப்பட்டனர்.
இதன்படி, கலைப்பிரிவுக்கான உறுப்பினர்களாக சிவகாசி அரசு மகளிர் கல்லூரி முதல்வர் காந்திமதி, காமராசர் பல்கலைக் கழகப் பொருளாதாரத்துறைப் பேராசிரியர் சுதாசினி, அறிவியல் பிரிவுக்கான உறுப்பினர்கள் உசிலம்பட்டி பசும்பொன் தேவர் கல்லூரி வேதியியல் துறை இணைப்பேராசிரியர் அமுதா, காமராசர் பல்கலை. பேராசிரியர் மேசாக் பொன்ராஜ், உதவிப் பேராசிரியர் ஜெயலட்சுமி, திண்டுக்கல் ஆர்விஎஸ் குமரன் கலை அறிவியல் கல்லூரி முதல்வர் திருமாறன் ஆகியோர் இடம் பெற்றனர்.