

சேலம் அரசு மருத்துவமனையில் இதுவரை கரோனாவுக்காக சிகிச்சை பெற்று வந்த 5 ஆயிரம் பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பினர், என டீன் பாலாஜிநாதன் தெரிவித்துள்ளார்.
சேலம் மாவட்டத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தினமும் 500 பேர் கரோனா தொற்றால் பாதிப்படைந்து வந்த நிலையில், அந்த எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வந்தது. தற்போது, தினமும் ஒற்றை இலக்கு எண்ணில் கரோனா தொற்றால் பாதிப்படைந்தவர்கள், அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். கரோனா தொற்று பரவல் சேலம் மாவட்டத்தில் குறைந்து வரும் நிலையில், இதுவரை 5 ஆயிரம் பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதுகுறித்து சேலம் அரசு மருத்துவமனை ‘டீன்’ பாலாஜி நாதன் கூறியது:
கரோனா தொற்றால் பாதிப் படைந்து 5,432 பேர் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதுவரை 5 ஆயிரம் பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது, அரசு மருத்துவமனையில் 117 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 315 பேர் உயிரிழந்துள்ளனர்.
சேலம் அரசு மருத்துவமனையில் தினமும் 15 பேர் வரை கரோனா பரிசோதனை செய்து கொள்ள வருகின்றனர். இதில் ஒற்றை இலக்க எண்ணிலேயே கரோனா தொற்று சிகிச்சைக்கு அனுமதிக்கப்படுகின்றனர். லேசான அறிகுறி உள்ள கரோனா தொற்று நோயாளிகள் அவரவர் வீட்டிலேயே தனிமைப் படுத்தப்பட்டு சிகிச்சை பெற்றுக் கொள்கின்றனர். சேலம் மாவட்டத்தில் கரோனா தொற்று பரவலின் தாக்கம் வெகுவாக குறைந்துள்ளது. இருப்பினும், பொதுமக்கள் கரோனா தொற்று பரவாமல் இருக்க சமூக இடைவெளி, முகக்கவசம் அணிதல், கிருமி நாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்வதை தொடர்ந்து கடைபிடிப்பதன் மூலம், சேலம் மாவட்டத்தில் கரோனா தொற்று பாதிப்பை பூஜ்ஜிய எண்ணிக்கையில் விரைவில் கொண்டு வந்துவிடலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.