

வில்பட்டி ஊராட்சியில் கட்டிடத்துக்கு சீல் வைத்ததை அகற்றக் கோரிய வழக்கில் நீதிமன்றத்துக்கு உதவ கொடைக்கானல் நகராட்சி வழக்கறிஞர் நியமிக்கப்பட்டுள்ளார்.
மதுரை ஐயர் பங்களாவைச் சேர்ந்த பொற்கொடி தேவாரம், உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு:
கொடைக்கானல் வில்பட்டி பெத்துப்பாறையில் எனக்குச் சொந்தமான இடத்தில் வில்பட்டி ஊராட்சி அனுமதி பெற்று கட்டிடம் கட்டியுள்ளேன். அதில் சிவகுமார் என்பவர் வாடகைக்கு இருந்து வருகிறார், கட்டிடத்துக்கு வீட்டு வரியை முறையாக செலுத்தி வருகிறேன்.
இந்நிலையில் கொடைக்கானலில் விதிமீறி கட்டப்பட்ட கட்டிடங்களுக்கு சீல் வைக்க உயர் நீதிமன்றக் கிளை உத்தரவிட்டிருப்பதாகக் கூறி என் கட்டிடத்தை அதிகாரிகள் பிப்ரவரி மாதம் சீல் வைத்தனர். பின்னர் நகராட்சி சட்டப்படி விதிமீறல் கட்டிடம் கட்டியது தொடர்பாக விளக்கம் அளிக்க நோட்டீஸ் அளித்தனர். கொடைக்கானல் மாஸ்டர் பிளான் வில்பட்டி ஊராட்சிக்குப் பொருந்தாது. கொடைக்கானலில் உள்ள விதிமீறல் கட்டிடங்களுக்கு சீல் வைக்கவே உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதற்கு மாறாக வில்பட்டியில் உள்ள கட்டிடத்துக்கு சீல் வைத்துள்ளனர்.
ஊராட்சியில் உள்ள கட்டிடத்துக்கு தமிழ்நாடு ஊராட்சி சட்டப்படியே நோட்டீஸ் அனுப்ப முடியும். நகராட்சி சட்டப்படி நோட்டீஸ் அனுப்ப முடியாது.
இதனால் கட்டிட சீல் அகற்றக் கோரி பல மனுக்கள் கொடுத்தும் உயர் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதாகக் கூறி அதிகாரிகள் மறுத்து வருகின்றனர். உயர் நீதிமன்றம் குடியிருப்பு பகுதிக்கு சீல் வைக்க எப்போதும் கூறவில்லை. எனவே என் கட்டிடத்துக்கு வைக்கப்பட்ட சீல் அகற்றவும், மின் இணைப்பை மீண்டும் வழங்கவும், நோட்டீஸை ரத்து செய்யவும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் கொடைக்கானல் நகராட்சி வழக்கறிஞர் டி.எஸ்.முகமது மொய்தீனை நீதிமன்றத்துக்கு உதவுபவராக (அமிகஸ் கியூரி) நியமித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.