

பெரம்பலூர் மாவட்டம் சிறுகுடல் கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் மக்காச்சோளம் சாகுபடி செய்துள்ளனர். இவர்கள், அதே ஊரில் தனியார் ஒருவரிடம் பாக்டம்பாஸ் உரத்தை வாங்கி மக்காச்சோளத்துக்கு அடி உரமாக இட்டுள்ளனர். இந்த உரமிட்ட 300 ஏக்கர் பரப்பளவிலான மக்காச்சோள பயிர்கள் கதிர் பிடிக்காமல் மகசூல் பாதிக்கப்பட்டது. இதனால், சந்தேகமடைந்த விவசாயிகள் இதுகுறித்து ஆட்சியரிடம் கடந்த வாரம் புகார் மனு அளித்தனர்.
இதைத்தொடர்ந்து, வேளாண்மைத்துறை அதிகாரிகள் பாதிக்கப்பட்ட வயல்களை பார்வையிட்டு, விவசாயிகள் வைத்திருந்த உரத்தின் மாதிரியை திண்டுக்கல்லில் உள்ள அரசு மண், உரம் பரிசோதனை கூடத்துக்கு ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர். உரத்தின் தரம் குறித்த ஆய்வு முடிவுகள் நேற்று வெளியானது.
அதில், விவசாயிகளிடம் விற்பனை செய்தது போலி உரம் என்பது உறுதியானது. இதைத்தொடர்ந்து, போலி உரத்தை விற்பனை செய்து, விவசாயிகளிடம் மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க காவல் துறைக்கு வேளாண்மைத்துறை அதிகாரிகள் பரிந்துரை செய்துள்ள னர்.
இது குறித்து, வேளாண்மைத் துறை அலுவலர்கள் கூறும்போது, ‘‘விவசாயிகளிடமிருந்து புகார் வந்ததையடுத்து, சர்ச்சைக் குரிய உரம் பறிமுதல் செய்யப்பட்டு, பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது. இதில் உரம் போலியானது என உறுதியாகி உள்ளது. அதை விற்பனை செய்தவர் மீது காவல் துறை மூலம் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றனர்.
கூடுதல் விலைக்கு விற்பனை
இந்நிலையில், அறந் தாங்கி, மணமேல்குடி, ஆவுடையார்கோவில் போன்ற வட்டாரங்களில் உரம் தட்டுப்பாடு நிலவுகிறது. இதைக் காரணம் காட்டி ஒரு சில கூட்டுறவு சங்கங்கள் மற்றும் கடைகளில் மூட்டைக்கு ரூ.50-ல் இருந்து ரூ.100 வரை கூடுதல் விலைக்கு உரம் விற்பனை செய்யப்படுகிறது என்றனர்.
இது குறித்து மாவட்ட வேளாண் இணை இயக்குநர் ராம.சிவக்குமார் கூறியது: அனைத்து வட்டாரங்களிலும் தேவைக்கு ஏற்ப உரம் இருப்பு வைத்து விநியோகிக்கப்பட்டு வருகிறது. பற்றாக்குறை உள்ள பகுதிகளை கண்டறிந்து உரம் விநியோகிக்கப்படும். அதிக விலைக்கு விற்பனை செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.