

வந்தவாசி அருகே தரமற்ற முறை யில் ரூ.1.61 கோடியில் 49 தொகுப்பு வீடுகளை கட்டியதற்கு திமுக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, பழங்குடியினர் குடியி ருப்புத் திட்டத்தின் கீழ் திருவண் ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த தெள்ளார் ஒன்றியம் பொன்னூர் கிராமத்தில் ரூ.1.61 கோடி மதிப்பில் 49 வீடுகள் கொண்ட இருளர் குடியிருப்பு கட்டப்பட்டது. இந்நிலையில், கடந்த 15-ம் தேதி குடியிருப்பை திறந்து வைத்து பயனாளிகளுக்கான வீட்டு சாவிகளை இந்து சமய அறநிலை யத் துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் வழங்கினார்.
இதற்கிடையில், கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழை யால் இருளர் குடியிருப்பு வீடுகளின் தளம் மற்றும் உட்புற சுவர்களில்ஈரக்கசிவு ஏற்பட்டது. மேலும், கை களை கொண்டு சுரண்டினால், சிமென்ட் பூச்சு பெயர்ந்து வந்துள் ளது. இதனால், தரமற்ற முறையில் வீடுகள் கட்டப்பட்டுள்ளதாக குற்றஞ் சாட்டப்பட்டது. இதையடுத்து, வீடுகளை ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட அலுவலர் ஜெயசுதா நேற்று முன்தினம் ஆய்வு செய்தார்.
அப்போது அவரிடம், "வீடுகள் கட்டி ஒப்படைக்கப்பட்டு 4 நாட்கள் கூட ஆகாத நிலையில், வீடுகள் உள்ளே தண்ணீர் கசிகிறது. தரமற்ற முறையில் சிமென்ட் பூசப் பட்டுள்ளது. இந்த வீடுகளில் தங்குவ தால், எதிர்காலத்தில் ஆபத்து ஏற்படக்கூடும் என அச்சம் ஏற்பட் டுள்ளது” என மக்கள் கூறினர். அவர்களிடம், விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என திட்ட இயக்குநர் கூறிவிட்டு சென்றார்.
இந்நிலையில், தரமற்ற வீடு களை கட்டி மக்களிடம் வழங்கிய தாக திமுக கடும் கண்டனம் தெரி வித்துள்ளது.
இதுகுறித்து முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “பொன்னூர் கிராமத்தில் பசுமை வீடு மற்றும் பிரதம மந்திரியின் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் ரூ.1.61 கோடியில் 49 பேருக்கு அவசர கோலத்தில் அள்ளித் தெளித்தார் போல் வீடுகள் கட்டப்பட்டு, திறப்பு விழா கடந்த 15-ம் தேதி நடைபெற்றுள்ளது. முந்தைய ஆட்சியர் கந்தசாமி தலைமையில் நடைபெற்ற விழாவில் தொகுப்பு வீடுகளை திறந்து வைத்து, பயனாளிகளிடம் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் ஒப்படைத்துள்ளார்.
அவசர அவரசமாக தரமற்ற வீடுகளை அதிமுக அரசு கட்டி, பயனாளிகளுக்கு வழங்கியதால், பெரும் இன்னலுக்கு ஆளாகி யுள்ளனர். திறப்பு விழா நடை பெற்றபோது வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்கவில்லை. திறப்பு விழா நடைபெற்று, குடிபுகுந்த 2 நாட்களில் பயனாளிகளுக்கு கடும் அதிர்ச்சி கிடைத்துள்ளது. சில நாட்களாக பெய்த மழையால், தொகுப்பு வீடுகளின் தளத்தின் உள் பகுதியில் நீர் கசிய தொடங்கியுள்ளது. ஜன்னல் மற்றும் கதவு ஓரங்களில் உள்ள சிமென்ட் கலவையை தொட்டதும் உடைந்து விடுவதாகவும், தரமற்ற முறையில் தொகுப்பு வீடுகள் கட்டப்பட்டுள்ளன என பயனாளிகள் கூறுகின்றனர்.
ஆதரவற்று, குடியிருக்க வேறுவழியில்லாமல், அரசின் தொகுப்பு வீடுகளை பெற்ற தொழிலாளர்களுக்கு புதிதாக தரமான தொகுப்பு வீடுகளை கட்டிக் கொடுக்க வேண்டும். தரமற்ற வீடுகளை கட்டிய அலுவலர்கள் மீது துறை ரீதியாக விளக்கம் கேட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்ற கண்துடைப்பு வேலைகளை விட்டுவிட்டு, அரசு அலுவலர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.