

மதுரையில் வீடுகள், தங்கும் விடுதிகளுக்கு வெளியே நிறுத்தப்படும் வாகனங்களை சேதப்படுத்துவது அதிகரித்து வருகிறது. போலீஸார் ரோந்தை தீவிரப்படுத்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மதுரை வண்டியூர் சுந்தர் நகரைச் சேர்ந்தவர் ராஜாத்தி(36). இவரது கணவர் பழனிவேல், அதே பகுதியில் இரு சக்கர வாகன பழுதுநீக்கும் ஒர்க் ஷாப் வைத்துள்ளார். தீபாவளியை யொட்டி ஒர்க்ஷாப்பை அடைத்து விட்டு பழனிவேல் வெளியூர் சென் றிருந்தார்.
இந்நிலையில், கடந்த 15-ம்தேதி இரவு பழனிவேலின் ஒர்க் ஷாப் முன் நிறுத்தி வைக் கப்பட்டிருந்த 2 மோட்டார் சைக் கிள்கள் மீது மர்ம நபர்கள் தீவைத்துவிட்டுச் சென்றுள்ளனர். இதில் வாகனங்கள் முற்றிலும் சேதமடைந்தன. இதையறிந்த ராஜாத்தி அண்ணாநகர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். இது தொடர்பாக காவல் ஆய்வாளர் பூமிநாதன் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
மதுரையில் வீடுகள், தங்கும் விடுதிகளுக்கு வெளியே நிறுத் தப்படும் வாகனங்களை சேதப் படுத்துதல், தீவைத்தல் ஆகிய சம்பவங்கள் தொடர்ந்து நடை பெற்று வருகின்றன. சில நாட்களுக்கு முன்பு கீரைத் துறை, காமராஜர்புரம் ஆகிய பகுதிகளில் வீடுகளுக்கு முன் நிறுத்தப்பட்டிருந்த கார், இரு சக்கர வாகனங்களுக்குத் தீ வைத்து சேதப்படுத்தப்பட்டது.
மானகிரி, கே.கே. நகர் பகுதியில் வீடுகள், தங்கும் விடுதிகளுக்கு வெளியே தெருக்களில் இரவு நேரத்தில் நிறுத்தப்பட்டிருந்த கார்களின் கண்ணாடிகள் சேதப் படுத்தப்பட்டன.
இச்செயல்களில் ஈடுபடுவோர் மீது போலீஸார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். ரோந்துப் பணி யைத் தீவிரப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.