

பெத்தநாயக்கன்பாளையம் சுற்று வட்டாரப் பகுதியில் உள்ள பசுக்களுக்கு உடலில் புண்கள், கால்களில் வீக்கம் ஏற்பட்டு வருகிறது. இதை தடுக்க கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் மருத்துவ முகாம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பெத்தநாயக்கன்பாளையம், பேளூர் உள்ளிட்ட கிராமங்களில் பசுக்களுக்கு உடலின் பல்வேறு இடங்களில் பெரிய புண்களும், கால்களில் கொப்புளங்களும் ஏற்பட்டுள்ளன. இதனால், பசுக்கள் நிற்க முடியாமலும், போதுமான அளவு தீவனம் உட்கொள்ள முடியாமலும் அவதிப்படுகின்றன. இதனால், அதிர்ச்சியடைந்துள்ள கால்நடை வளர்ப்போர், விவசாயிகள் உள்ளிட்டோர் கால்நடை பராமரிப்புத் துறையினர் உடனடியாக முகாம் அமைத்து பசுக்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
இதுதொடர்பாக பெத்த நாயக்கன்பாளையத்தைச் சேர்ந்த விவசாயி அன்பழகன் கூறியதாவது:
கால்நடைகளுக்கு மழைக் காலத்துக்கு முன்னர் போட வேண்டிய தடுப்பூசியை, இங்கு பலரும் போடவில்லை. தற்போது பசுக்களுக்கு உடல் முழுவதும் ஆங்காங்கே பெரிய புண்களும், கால்களில் வீக்கமும் ஏற்பட்டுள்ளது. எனவே, பசுக்களை காப்பாற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதுதொடர்பாக கால்நடை பராமரிப்புத் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, “சேலம் மாவட்டத்தில் கால்நடை களுக்கான கோமாரி நோய் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. எனவே, கால்நடைகளுக்கு கோமாரி நோய் ஏற்படவில்லை. வாழப்பாடியில் ஓரிரு இடங்களில் பசுக்களுக்கு நோய் ஏற்பட்டதை அறிந்து, அங்கு நோய் தொடர்பான பரிசோதனை செய்ய மாதிரியை எடுத்துள்ளோம்.
இது ஒருவித அம்மை நோயின் அறிகுறியாக உள்ளது. இதற்கு தடுப்பூசி எதுவும் கிடையாது. ஆனால், கால்நடைகளுக்கு நோய் எதிர்ப்பு மருந்துகள், நாட்டு மருந்துகளை கொடுத்து, சிகிச்சை அளிக்க முடியும்.
இந்நோயால் கால்நடைகளின் உயிருக்கு ஆபத்து ஏற்படாது. 4 அல்லது 5 நாட்களில் குணப்படுத்த முடியும். பெத்தநாயக்கன்பாளையத்தில் மருத்துவ முகாம் அமைத்து உரிய சிகிச்சை அளிக்கப்படும்” என்றார்.