

சேலம் சுகவனேஸ்வரர் கோயிலில் நடைபெற்று வரும் திருப்பணிகள் மற்றும் மாவட்டத்தில் உள்ள முக்கிய கோயில்களில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் ஆய்வு செய்தார்.
மேட்டூர் அடுத்த நங்கவள்ளி பெரிய சோரகையில் உள்ள சென்றாய பெருமாள் கோயிலில் இன்று (19-ம் தேதி) கும்பாபிஷேக விழா நடைபெறவுள்ளது. இதில், தமிழக முதல்வர் பழனிசாமி, இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் மற்றும் எம்பி, எம்எல்ஏ-க்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்கவுள்ளனர்.
இவ்விழாவை தொடர்ந்து மேட்டூர் அடுத்த வனவாசி அரசினர் பலவகை தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில் நடைபெறும் அரசு விழாவில் புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற திட்டப் பணிகளை தொடங்கிவைத்து, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை முதல்வர் பழனிசாமி வழங்கவுள்ளார்.
இதனிடையே, நேற்று பெரியசோரகை சென்றாயப் பெருமாள் கோயிலில், கும்பாபிஷேக விழா ஏற்பாடுகள் தொடர்பாக இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன், சேலம் ஆட்சியர் ராமன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.
தொடர்ந்து, சேலம் சுகவனேஸ்வரர் கோயிலில் ரூ.86.59 லட்சம் மதிப்பில் நடைபெற்று வரும் திருப்பணிகளை பார்வையிட்ட அமைச்சர், அதிகாரிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினார். பின்னர் கோட்டை மாரியம்மன் கோயில், கோட்டை பெருமாள் கோயில் மற்றும் குமரகிரி பாலதண்டாயுதபாணி சுவாமி கோயிகளிலும் அமைச்சர் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது, எம்எல்ஏ-க்கள் வெங்கடாசலம், சக்திவேல் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.