அரசு மானியத்துடன் நாட்டுக்கோழி குஞ்சு வளர்ப்பு விண்ணப்பிக்க ஆட்சியர் அழைப்பு

அரசு மானியத்துடன் நாட்டுக்கோழி குஞ்சு வளர்ப்பு விண்ணப்பிக்க ஆட்சியர் அழைப்பு

Published on

அரசின் மானியம் பெற்று நாட்டுக்கோழி குஞ்சுகளை வளர்க்க விரும்பும் விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என ஈரோடு ஆட்சியர் அழைப்பு விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக ஈரோடு ஆட்சியர் சி.கதிரவன் வெளியிட்டுள்ள அறிக்கை:

தேசிய வேளாண்மை அபிவிருத்தித் திட்டத்தின்கீழ், ஈரோடு மாவட்டத்தில் நாட்டுக்கோழிவளர்ப்பு மூலம் தொழில்முனைவோர் மேம்பாட்டு திட்டம் செயல்படுத்தப் படவுள்ளது. இத்திட்டத்தில் ஒரு ஊராட்சி ஒன்றியத்துக்கு, அதிகபட்சமாக 3 பயனாளிகள் வீதம் முன்அனுபவம் அல்லது ஆர்வமுடைய 35 விவசாயிகள் முதல்கட்டமாக தேர்வு செய்யப்படவுள்ளனர். தேர்வு செய்யப்படும் பயனாளிகளுக்கு 50 சதவீதம் மானியமாக கோழிக்குஞ்சுகள் கொள்முதலுக்கு ரூ.15 ஆயிரம், தீவனம் கொள்முதலுக்கு ரூ.22 ஆயிரத்து 500 மற்றும் அடைகாக்கும் கருவி கொள்முதலுக்காக அதிகபட்சமாக ரூ.37 ஆயிரத்து 500 என மொத்தம் ரூ.75 ஆயிரம் வழங்கப்படும்.

இத்திட்டத்தில் கிராம ஊராட்சியில் நிரந்தரமாக குடியிருக்கும் பயனாளிகள் மட்டுமே தேர்வு செய்யப்படுவர். தேர்வு செய்யப்படுவோர், 1, 000 கோழிகள் வளர்க்கக்கூடிய, 2,500 சதுர அடி பரப்பளவு கொண்ட பண்ணைக் கொட்டகை அமைப்பு சொந்தமாக வைத்திருக்க வேண்டும். கோழிவளர்ப்புக்குத் தேவையான தீவனத் தட்டுகள் மற்றும் தண்ணீர் தட்டுகள் பயனாளியே கொள்முதல் செய்ய வேண்டும்.

தேர்வு செய்யப்படும் பயனாளிகள் 3 ஆண்டுகளுக்கு குறையாமல், பண்ணையைப் பராமரிக்க உத்தரவாதம் அளிக்க வேண்டும். முதல் கட்டமாக 3 நாட்கள் அடிப்படை கோழிவளர்ப்பு தீவன மேலாண்மை, தடுப்பூசி போடுதல் போன்ற பயிற்சிகளும், அடைகாக்கும் கருவி கொள்முதல் செய்யப்படும்போது 2 நாட்கள் குஞ்சு பொறிப்பு குறித்தும் பயிற்சி வழங்கப்படும். தகுதியான, ஆர்வமுள்ள விவசாயிகள் அருகிலுள்ள கால்நடை மருந்தக, கால்நடை உதவி மருத்துவரை அணுகி விண்ணப்பிக்கலாம், எனத் தெரிவித்துள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in