

தீபாவளி தொடர் விடுமுறையைத் தொடர்ந்து சேலம் குரும்பப்பட்டி பூங்காவில் நேற்று வழக்கத்தை விட மக்கள் கூட்டம் அதிகம் இருந்தது.
கரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த 7 மாதங்களாக சேலம் குரும்பப்பட்டி உயிரியல் பூங்கா மூடப்பட்டிருந்தது. ஊரடங்கு தளர்வுகளை அடுத்து பூங்கா கடந்த 11-ம் தேதி மீண்டும் திறக்கப்பட்டது. தீபாவளி தொடர் விடுமுறையான நேற்று பூங்காவுக்கு சேலம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் இருந்து ஏராளான மக்கள் வந்திருந்தனர். இதனால், 7 மாதங்களுக்கு பின்னர் மக்கள் கூட்டத்தால் பூங்கா களைகட்டியது.
பார்வையாளர்கள் முகக் கவசம் அணிந்திருப்பதை உறுதி செய்தும், உடல் வெப்ப பரிசோதனை, கைகள் கிருமிநாசினி கொண்டு கழுவுவது மற்றும் பூங்கா நுழைவு வாயிலில் கிருமிநாசினி நிரம்பிய சிறு தொட்டியில் கால்களை கழுவிச் செல்லுதல் உள்ளிட்ட கரோனா கட்டுப் பாடுகள் பின்பற்றப்பட்டன. மேலும், பூங்காவினுள் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்ற அறிவுறுத்தப்பட்டனர்.
இதுதொடர்பாக பார்வையாளர் கள் சிலர் கூறும்போது, “கரோனா வைரஸ் பரவல் அச்சம் நீடிப்பதால், வெளியூர்களுக்கு குடும்பத் துடன் செல்வதை தவிர்க்க வேண்டியுள்ளது.
எனவே, உள்ளூரில் உள்ள குரும்பப்பட்டி பூங்காவுக்கு வந்தோம். இங்கு இயற்கையான சூழல், விலங்குகள் மற்றும் பறவை களை பார்க்கும்போது மனதுக்கு நிம்மதியாக உள்ளது. இங்கு பொழுதுபோக்கு அம்சங்களை மேம்படுத்த வேண்டும்” என்றனர்.