

தூத்துக்குடி மாவட்டத்தின் 26-வது ஆட்சியராக டாக்டர் கே.செந்தில்ராஜ் நேற்று பொறுப்பேற்றார். மாவட்டத்தின் வளர்ச்சிக்கு தேவையான திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என அவர் உறுதியளித்தார்.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியராக கடந்த 24.05.2018 முதல் பணியாற்றி வந்த சந்தீப் நந்தூரியை, திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியராக பணியிட மாறுதல் செய்து தமிழக அரசு கடந்த 12-ம் தேதி உத்தரவிட்டது. அவருக்கு பதிலாக, தேசிய சுகாதார இயக்கத்தின் இயக்குநர் டாக்டர் கே.செந்தில்ராஜ் தூத்துக்குடி மாவட்டத்தின் புதிய ஆட்சியராக நியமிக்கப்பட்டார்.
தூத்துக்குடி மாவட்டத்தின் 26-வது ஆட்சியராக நேற்று காலை அவர் பொறுப்பேற்றுக் கொண்டார். பின்னர் ஆட்சியர் செந்தில்ராஜ் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தூத்துக்குடி மாவட்டத்தின் வளர்ச்சிக்கு என்னென்ன திட்டங்கள் தேவையோ, அவற்றைத் தொடர்ந்து செயல்படுத்துவேன். மாநகராட்சி ஆணையர், கூடுதல் ஆட்சியர், சார் ஆட்சியர், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் என அனுபவம் வாய்ந்த அதிகாரிகள் இங்கே உள்ளனர். அவர்களோடு இணைந்து வளர்ச்சிப் பணிகளை சிறப்பாக செயல்படுத்துவேன். எல்லாத் துறைகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்து வளர்ச்சி பணிகளை தொடர்ந்து செய்வேன்.
நான் திருநெல்வேலியில் தான் மருத்துவம் படித்தேன். எனவே, இந்தப் பகுதி எனக்கு புதிதல்ல, பழக்கப்பட்ட பகுதி தான். அதுபோல இங்குள்ள அதிகாரிகளும் பழக்கமானவர்கள் தான். எனவே, மாவட்டத்தின் வளர்ச்சிக்கு தொடர்ந்து பணியாற்றுவேன் என்றார்.
கூடுதல் ஆட்சியர் (வருவாய்) விஷ்ணு சந்திரன், தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் வீ.ப.ஜெயசீலன், சார் ஆட்சியர் சிம்ரோன் ஜீத் சிங் கலோன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் தனபதி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
செந்தில்ராஜ், புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்தவர். திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் எம்பிபிஎஸ் படித்துள்ளார். 2012-ம் ஆண்டு பிரிவு ஐஏஎஸ் அதிகாரியான அவர் வேலூர் மாவட்டத்தில் பயிற்சி உதவி ஆட்சியராக பணியை தொடங்கினார். பின்னர் திருப்பூர், ஓசூர் ஆகிய இடங்களில் சார் ஆட்சியராக பணியாற்றியுள்ளார். தொடர்ந்து சுகாதாரத்துறையில் இந்திய மருத்துவப் பிரிவு ஆணையர், தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்க திட்ட இயக்குநர் பதவிகளை வகித்த செந்தில்ராஜ், கடைசியாக தேசிய சுகாதார இயக்கத்தின் இயக்குநராக பணியாற்றி வந்தார்.
டாக்டர் செந்தில்ராஜை, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். முன்னதாக விமான நிலையத்தில் தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜுவை, செந்தில்ராஜ் சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்போது எம்எல்ஏக்கள் எஸ்.பி.சண்முகநாதன், பி.சின்னப்பன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.