

தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் அருகே பொதுக் கழிப்பிடத்தில் மர்மமான முறையில் இறந்து கிடந்த தொழிலாளி கொலை செய்யப்பட்டிருப்பது விசார ணையில் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக 4 பேரை போலீஸார் கைது செய்தனர்.
விளாத்திகுளம் அருகேயுள்ள துவரந்தை கிராமத்தை சேர்ந்தவர் பச்சைமால் (53). இவர், ஆத்தூர் அருகே முக்காணி அம்பேத்கர் நகரில் உள்ள தனது மகள் செந்தூர்புஷ்பம் வீட்டில் தங்கியிருந்து மரம் வெட்டும் தொழில் செய்து வந்தார். கடந்த 9-ம் தேதி வீட்டிலிருந்து வெளியே சென்ற பச்சைமால் திரும்பி வரவில்லை. இந்நிலையில் கடந்த 13-ம் தேதி காயல்பட்டினம் ரத்தினபுரி பப்பரபள்ளி சுடுகாட்டு சாலையில் உள்ள பொதுக்கழிப்பிடத்தில் அவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
இது தொடர்பாக ஆறுமுகநேரி போலீஸார் சந்தேக மரணம் என வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். இதில் பச்சைமால் அடித்துக் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. காயல்பட்டினம் லட்சுமிபுரத்தைச் சேர்ந்த வேல்முருகன் (32), ஆழ்வார்திருநகரியைச் சேர்ந்த மாரியப்பன் (43), தேனி மாவட்டம் கானவிளையைச் சேர்ந்த குமார் (49) ஆகியோருடன் பச்சைமால் திருநெல்வேலி மாவட்டம் பரப்பாடி அருகே பாரதி நகரில் ஒரு வீட்டில் தங்கியிருந்து வேலை செய்துள்ளார். அங்கு கடந்த 12-ம் தேதி இரவு அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது.
வேல்முருகன், மாரியப்பன், குமார் ஆகியோர் சேர்ந்து பச்சைமாலை அடித்துக் கொலை செய்ததும், பின்னர் பரப்பாடி நடுத்தெருவைச் சேர்ந்த செல்வகுமார் (36) என்பவரது வேனில் அவரது சடலத்தை ஏற்றி காயல்பட்டினம் கொண்டு வந்து பொதுக்கழிப்பிடத்தில் போட்டுள்ளதும் தெரிய வந்தது.
இதையடுத்து கொலை வழக்காக மாற்றி வேல்முருகன், மாரியப்பன், குமார், செல்வக்குமார் ஆகிய 4 பேரையும் போலீஸார் கைது செய்தனர்.
இந்த தகவல்களை எஸ்பி ஜெயக்குமார் நேற்று ஆறுமுகநேரி காவல் நிலையத்தில் வைத்து செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.