

மதுரை வேளாண் கல்லூரி வளாகத்தில் உள்ள சமுதாய அறிவியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் உலக நீரிழிவு நோய் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இதற்குத் தலைமை வகித்து ஆராய்ச்சி நிலைய முதல்வர் எஸ்.அமுதா பேசியதாவது:
நீரிழிவு நோய் தினம் நவ. 14-ல் கடைப்பிடிக்கப்படுகிறது. உலக அளவில் இந்தியாதான் நீரிழிவு நோய் பாதிப்பில் முதல் இடத்தில் உள்ளது. 5 முதல் 7 சதவீத மக்கள் கிராமங்களிலும் 15 முதல் 20 சதவீத மக்கள் நகரத்திலும் நீரிழிவு நோயால் பாதிக்கப்படுகிறார்கள்.
தமிழகத்தைப் பொருத்தவரையில் அரிசிதான் முக்கிய உணவு. அதற்கு மாற்றாக கோதுமை, தானியம், பயறு வகைகள், சிறுதானியங்கள் மற்றும் பழங்கள், காய்கறிகள் போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். மேலும் முறையான உடற்பயிற்சி மற்றும் நடைப்பயிற்சியை தினசரி வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும், என்று அவர் பேசினார்.
அரசு ராஜாஜி மருத்துவமனை காது மூக்கு, தொண்டை மருத்துவத் துறைப் பேராசிரியர் எம்.தினகரன் பேசுகையில்,
‘‘பாதிக்கப்பட்ட நபர் சர்க்கரை அளவை அடிக்கடி சரிபார்க்க வேண்டும். தானியங்கள், சிறுதானியங்கள், பயறுவகைகள் உள்ளிட்ட ஆரோக்கியமான உணவுகள் வழக்கமான இன்சுலின் சுரப்பை மேம்படுத்தி நீரிழிவு நோய் வராமல் தடுக்கின்றன’’ என்றார். கல்லூரி முதல்வர் வி.கே.பால்பாண்டி உட்பட பலர் பேசினர்.