

சேலத்தில் நேற்று திடீரென மழை பெய்ததால், தீபாவளி பண்டிகைக்காக ஆடைகள், வீட்டு உபயோக பொருட்களை விற்பனை செய்ய சாலையோரம் காத்திருந்த வியாபாரிகள் பெரிதும் பாதிப்படைந்தனர்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை பல்வேறு மாவட்டங்களில் பெய்து வருகிறது. சேலம் மாவட்டத்தில் கடந்த இரண்டு வாரமாக அவ்வப்போது பருவ மழை பெய்து வருகிறது. பெரும்பாலும் இரவு நேரங்களில் மழை பெய்து வந்த நிலையில், நேற்று முன் தினம் இரவு 8.30 மணிக்கு பெய்த மழை இரவு 11 மணி வரை நீடித்தது. தொடர்ந்து நேற்று காலை வானம் மேக மூட்டமாகவும், குளிர்ந்த சீதோஷண நிலையில் இருந்து வந்தது.
தீபாவளி பண்டிகைக்காக நேற்று சேலம் சின்னக்கடை வீதி, பஜார் தெரு, முதல் அக்ரஹாரம், அருணாச்சல ஆசாரி தெரு, செவ்வாய்ப்பேட்டை என மாநகரின் பல முக்கிய வீதிகளில் சாலையோர வியாபாரிகள் கடை விரித்து, பொருட்களை விற்பனை செய்து வந்தனர். இந்நிலையில், நேற்று மதியம் பலத்த காற்றுடன் மழை பெய்ததால், சாலையோர கடை வியாபாரிகள் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக வியாபாரம் பாதிப்படைந்தது.
சேலத்தில் நேற்ற முன் தினம் இரவு பெய்த மழை அளவு விவரம் (மில்லி மீட்டரில்): தம்மம்பட்டி -38, காடையாம்பட்டி 14, வீரகனூர் 10, ஆணைமடுவு 15, ஏற்காடு 11.8, வாழப்பாடி 5, ஆத்தூர் 33.6, பெத்தநாயக்கன் பாளையம் 27, சேலம் 6.6 மழை அளவு பதிவானது.